ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. தீபாவளி ரிலீசாக தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து இயக்குநர் சிவா எக்ஸ்க்ளூசிவான தகவல்களை தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், “மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படம் எடுப்பதற்கான கட்டமைப்பும், ஆர்வம் ஆகிய இரண்டுமே இருக்கக்கூடிய நிறுவனம். கலாநிதி மாறன் சாரின் படங்கள் மீதான ஆர்வம் அவர் கதைக்கேட்ட விதத்திலேயே தெரிந்தது. ரொம்ப ரசித்து கதைக்கேட்டார். கதைக்கேட்டு முடித்த உடனேயே, அண்ணாத்த படம் பிளாக் பஸ்டர் படமாக இருக்கப் போகிறது என தெரிவித்தார். அவர் கொடுத்த நம்பிக்கைக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். வழக்கமாக ஒரு படத்திற்கு ஒரு தீம் மியூசிக்தான் இருக்கும். ஆனால் அண்ணாத்த படத்திற்கு 3 தீம் மியூசிக் உள்ளன. 3க்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு இருக்கும் ஒரே சம்பந்தம் அவை கொடுக்கும் உற்சாகம் மட்டுமே. அது இசையமைப்பாளர் இமானின் மேஜிக் என்றுதான் சொல்ல வேண்டும். படம் பார்த்து முடித்து விட்டு மாறன் சார் வெளியே வந்து என்னைப் பார்த்து கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார். அதை ஒரு இயக்குநராக என்னால் மறக்கவே முடியாது. படம் பார்க்கும் அனைவருக்கும் முழு திருப்தியையும், சந்தோசத்தையும் அண்ணாத்த படம் கொடுக்கும்” என தெரிவித்தார்.
இப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ், இப்படம் தமிழ் படத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடு என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 677 திரையரங்குகளில் 'அண்ணாத்தே' திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. கணிசமான இந்தியர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில், படம் 117 திரைகளில் வெளியிடப்படுகிறது.
மலேசியாவில் 110 திரையரங்குகளிலும், அண்டை நாடான சிங்கப்பூரில் 23 திரையரங்குகளிலும் படம் திரையிடப்படுகிறது. தீவு நாடான இலங்கையில் 86 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது. கனடாவில் 17 திரையரங்குகளிலும், இங்கிலாந்தில் 35 திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. ஐரோப்பாவில் 43 திரையரங்குகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 85 திரையரங்குகளிலும் வெளியாகிறது அண்ணாத்த படம்.