தீபாவளி ரேஸில்... மன்னிக்கவும் சோலோ ரேஸில் நிற்கிறது அண்ணாத்த திரைப்படம். எதிர்த்து வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்வியும், விமர்சனமும் ஒரு புறம் போய் கொண்டிருக்க, அண்ணாத்த ட்ரெய்லர் குறித்து பலருக்கு ஒரு சந்தேகம் மனதார இருந்து கொண்டே தான் உள்ளது. அது படத்தின் ட்ரெய்லர் தொடர்பான.
அண்ணாத்த ஒரு கிராமிய பின்னணி கொண்ட படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நீண்ட... இடைவெளிக்கு பின் கிராமப்பின்னணியில் நடிக்கும் படம். சிறுத்தைக்கு அடுத்ததாக தொடர்ந்து ‛தல’ அஜித்துக்கு தொடர்ந்து 4 படங்கள் இயக்கிய சிவா தான், இம்முறை அண்ணாத்த படத்தை இயக்குகிறார். கடந்த முறை பொங்கல் ரேஸில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடத்து வெளியான பேட்டை படத்தை எதிர்த்து வெளியான சிவாவின் விஸ்வாசம், வசூலில் மிரட்டியது.
இதனாலேயே சன் பிக்சர்ஸ் படத்தில் சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டு, சிவாவின் அதே கூட்டணி; அஜித்திற்கு பதில் சூப்பர் ஸ்டார் ரஜினி என முடிவாகி படமும் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதுவரை எல்லாம் ஓகே. ஆனால் விமர்சனம் எழுந்த இடம், படத்தின் ட்ரெய்லரில் தான். அண்ணாத்தா ட்ரெய்லர், அப்படியே விஸ்வாசம் காப்பியாக இருந்தது என்பத தான் அனைவர் முன்வைக்கும் கருத்து. உண்மையில் அது உண்மையும் கூட. ஏன் அப்படி நடந்தது? ஒரு இயக்குனர் தான் எடுக்கும் அடுத்த படத்தின் ட்ரெய்லருக்கு, முந்தைய படத்தை ஏன் காப்பி அடிக்க வேண்டும்? என்கிற கேள்வியெல்லாம் சரளமாய் யாருக்கும் எழும் கேள்வி தான்.
ஆனால் இந்த கேள்வி இதற்கு முன்பே இயக்குனர் சிவாவிற்கு வந்துள்ளது. அதுவும், விஸ்வாசம் ட்ரெய்லரின் போது தான். விஸ்வாசம் ட்ரெய்லர் வந்த போது, இது வீரம் படத்தின் ட்ரெய்லர் போன்று உள்ளதே என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது இயக்குனர் சிவா சொன்ன பதில் தான், அண்ணாத்த படத்தின் ட்ரெய்லருக்கும் பொருந்தும்.
‛நான் எனது படங்களில் ஒரு பார்மட் வைத்திருப்பேன்; அது போல தான் ட்ரெய்லருக்கு என்று ஒரு டெம்ப்ளெட் இருக்கும்... அது வீரம் மட்டுமல்ல, வேதாளம், விவேகம் என அனைத்திற்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். காட்சி களம் வேறு என்பதால் வேதாளம், விவேகம் ட்ரெய்லரை நீங்கள் பொருத்தி பார்க்க மாட்டீர்கள். ஆனால் வீரமும்-விஸ்வாசமும் கிராமிய கதைக்களம் என்பதால், அதன் காட்சிகள் உங்களுக்கு ஒரே மாதிரியானதாக தெரியும். உண்மையில் அது ஒரே மாதிரியானது தான்; ஆனால் அது பார்மெட் மட்டுமே. கதையோ, காட்சியோ கட்டாயம் வேறுபடும்,’’ என்றார்.
உண்மையில் அவர் சொன்னது போல, வீரம்-விஸ்வாசம் இடையே எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ட்ரெய்லர் என பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சியாக இருக்கும். அதை தான் அவர் டெம்பிளேட் என்கிறார். இப்போது அண்ணாத்த டெம்பிளேட்டும் அப்படி தான் வந்துள்ளது. வீரம்-விஸ்வாசம் இடையே அவர் மேலும் இரு வேறு விதமான கதை செய்திருந்ததால் அதில் வித்தியாசம் காணமுடியவில்லை. இந்த முறை, விஸ்வாசத்திற்கு அடுத்ததாக அண்ணாத்த வந்ததால், இரண்டும் கிராமியப் பின்னணி கொண்ட கதை என்பதால், டெம்பிளேட் ஒன்றோடு ஒன்றாக பொருந்திவிட்டது. திரைக்கதையில் சிவா எப்போதும் கிங் மேக்கர். அவரால், விஸ்வாசம் 2 என்று கூட படம் எடுக்க முடியும். அவர் கதையை விட திரைக்கதையை நம்புபவர். முழுப்படத்தை சுமக்கும் துணிவு உள்ளவருக்கு, ட்ரெய்லரை காப்பியடிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. விஸ்வாசம் ட்ரெய்லர் வரும் போது, அப்படி இருக்குமோ... இப்படி இருக்குமோ என்றெல்லாம் கருத்துக் கூறப்பட்டது. கடைசியில் அது ஒரு பாசப்போராட்டக்களமாக வசூலை குவித்தது. அந்த மேஜிக் அண்ணாத்தையும் தொடரலாம். காரணம், சிவா, வெற்றி பார்மட்டிலும் தனக்கென தனி டெம்ப்ளெட் வைத்திருப்பவர் தான்.