நீங்கள் ஒரு தள்ளு வண்டிக்கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். வீட்டில் இருந்தால் சுமார் ஒரு ஆறு தோசையாவது சாப்பிடும் நீங்கள் பணத்தை கருத்தில் கொண்டு மூன்று தோசையுடன் நிறுத்திக்கொள்கிறீர்கள். அப்போது ஒரு காவலர் வந்து ஒரு நான்கு  தோசைகள் ஒரு பெப்பர் சிக்கன் பார்சல் வாங்கிகொண்டு பணம் ஏதும் தராமல் செல்வதைப் பார்த்தால் மனதின் அடியாழத்தில் இருந்து ஒரு ஆத்திரம் வந்ததுண்டா. ஒரு பத்திரிகையாளராக நாம் இருந்தால் ஒரு நொடி தோன்றும் இல்லையா? அப்படி எந்த அதிகாரமும் இல்லாத ஒரு சாமானியன் சமூதாயத்தை திருத்த விரும்பினால் அவன் என்ன செய்வான்.


கடந்த 2005 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் அந்நியன். விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ், விவேக் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள். இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்கிறது அந்நியன்.


சுஜாதாவும் ஷங்கரும்


எழுத்தாளர் சுஜாதா சங்கர் படங்களுக்கு திரைக்கதை எழுதியவரை ஷங்கர் இயக்கியப் படங்கள் கச்சிதமான திரைக்கதைகளைக் கொண்டிருந்தன. அதே நேரத்தில் சுஜாதாவின் அறிவியல் ஞானம் ஷங்கர் படத்திற்கு லாஜிக்கலான நியாயத்தை சேர்த்தன. சுஜாதா இல்லாமல் ஷங்கர் இயக்கியத் திரைப்படம் 2.0. எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களில் பனியாற்றினார் என்றாலும் சுஜாதாவின் இடத்தை அவரால் ஈடு செய்ய முடியவில்லை.


லட்சிய நோக்கம் கொண்ட ஷங்கரின் கதாநாயகர்கள்


ஷங்கரின் எல்லா கதாபாத்திரங்களும்  லட்சியவாதிகளாக இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? சுதந்திரத்திற்குப் பிந்தையக் காலகட்டத்தில் இருந்து இந்திய சினிமாவில் அதிகம் பேசப்பட்ட ஒரு கதைக்களம் தேசபற்று. சுதந்திரத்திற்கு பின் உருவான தலைமுறையைச் சார்ந்த இளைஞர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நாட்டைத் திருத்தும் லட்சிய நோக்கத்துடன் இருந்தார்கள், வேலைவாய்ப்பின்மை ,  ஊழல் நிறைந்த சமூதாயத்தின் மேல் கோபம், படித்து வெளி நாடுகளுக்குப் போகும் இளைஞர்களில் மீதான வெறுப்பு, அரசியலில் இளைஞர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் ஆகியவற்றை விவாதித்துக் கொண்டு சிகரெட்டை புகைத்துத் தள்ளினார்கள். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, முருகதாஸ் இயக்கிய ரமணா, ஷங்கரின் அந்நியன் ஆகியப் படங்களைப் பார்த்தால் அந்தத் தலைமுறையின் பொதுவான மனோபாவத்தை புரிந்துகொள்ள முடியும். உண்மையாகவே இந்த இளைஞர்கள் இந்த நாட்டின் நிலையை உயர்த்த வேண்டும் என்கிற லட்சியத்தை நம்பினார்கள்.


அந்நியன்


அப்படியான ஒரு லட்சியவாதியின் ஆசை நிறைவேறாமல் போனால் அவன் வேறு எப்படி இந்த சமுதாயத்தை திருத்த முடியும் என்கிற ஒரு கற்பனை வடிவமைப்பே அந்நியன் கதாபாத்திரம். தெரிந்தோ தெரியாமலோ இந்த பின்னணியில் இருந்துதான் நாம் இந்தப் படத்தை ரசித்திருக்கிறோம்.  சமூதாயத்தின் மீது அக்கறைக் கொண்ட சாமானியன் தனது இயலாமையால் வேறு ஒரு நபராக மாறி சமுதாயத்தை திருத்துகிறான்.


யார் குற்றவாளிகள் ?


மிகைப்படுத்தப்பட்ட அதீத வன்முறைக் காட்சிகளின் சுரண்டல் எல்லா ஷங்கர் படங்களிலும் இருப்பது போலவே அந்நியன் படத்திலும் உண்டு. முக்கிய கேள்வி ஒன்றையும்  இங்கு எழுப்புவது அவசியம் . இத்தகையப் படங்களில் குறிப்பிடப்படும் ஊழல் செய்பவர்கள், சோம்பேறிகள் என குற்றம் சுமத்தப்படும் மக்கள் பொருளாதாரத்தின் பின் தங்கிய உழைக்கும் மக்களாக மட்டுமே இருப்பது ஏன். ஊழல் எல்லா காலத்திலும் இருந்து வருகிறது என்றாலும் ஒரு குறிப்பிட்ட சாராருக்கான அதிகாரம் அனைவருக்குமானதாக கைமாறிய போது மட்டும் ஏன் ஊழல் நாட்டின் பெரியப் பிரச்சனையாக கருதப்படுகிறது. ஷங்கரையும் சுஜாதாவையும் தான் கேட்கவேண்டும்.