மடோன் அஸ்வின் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் மாவீரன். இந்தப் படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


படத்தை பாராட்டிய ஷங்கர்


மாவீரன் படத்தின் கதாநாயகியாக நடித்திருப்பவர் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர். தற்போது மாவீரன் படத்தை பார்த்து சங்கர் படத்தின் இயக்குநர் மற்றும்  நடிகர்களை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவில் அவர் ”மாவீரன் படத்தை எழுதியிருக்கும் விதமும் படத்தை இயக்கியிருக்கும் விதத்தை பார்க்கும் போது இயக்குநர் மடோன் அஸ்வின் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கக்கூடிய இருவராக இருப்பார் என்று தெரிகிறது.


திரைக்கதையில் அமைந்திருக்கும் ஆக்‌ஷனும் ஹியூமரும் மிக அற்புதமாக வந்திருக்கின்றன. பாராட்டிற்குரிய நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியிருக்கிறார். அதிதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக  செய்திருக்கிறார். சரிதா யோகிபாபு மற்றும் மிஸ்கின் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.” என்று கூறியுள்ளார் ஷங்கர்.






படத்தின் கதை 


பிரச்சனையில் இருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்பதே இப்படத்தின் அடிப்படை கதையாகும்.


சென்னையில் காலம் காலமாக வசிக்கும் பூர்வகுடி மக்கள் வளர்ச்சிக்காக நகரில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு "மக்கள் மாளிகை" அடுக்குமாடி குடியிருப்புக்கு மாற்றப்படுகிறார்கள். ஊழலின் ஊற்றாக, அடுத்த நொடி உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் அந்தக் குடியிருப்பில் தினம் தினம் பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் போகாமல் எதையும் அட்ஜஸ்ட் பண்ணி வாழும் தைரியம் இல்லாத காமிக்ஸ் வரைபட கலைஞரான சிவகார்த்திகேயன், ஒரு பிரச்சினையில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது தனக்கு கிடைத்த சூப்பர் பவரை கொண்டு அந்தத் துறை அமைச்சராக வரும் மிஷ்கினுடன் தைரியமாக மோதுகிறார்.


மக்கள் அவரை மாவீரனாக பார்க்கிறார்கள். சூப்பர் பவரை கொண்டு சிவகார்த்திகேயன் மாவீரனாக அவர் மக்களை காத்தாரா? இல்லை மக்களுக்கான உரிமைப் போரில் தோற்றாரா? என்பதே இப்படத்தின் கதையாகும்.


ஷங்கர்


தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்கு பெயர்போனவர் இயக்குநர் ஷங்கர். தற்போது இந்திய 2 படத்தை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா. பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத், சித்தார்த் முதலியவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள். அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தியன் 2 படத்தினைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை இயக்குகிறார் ஷங்கர். இந்த இரண்டு படங்களின் வேலைகளை முடித்துவிட்டு இரண்டாவது முறையாக இளைய தளபதி விஜயை இயக்க இருக்கிறார் ஷங்கர்.