இயக்குநர் செல்வபாரதி உருவாக்கத்தில் வடிவேலு, விஜய், மணிவண்ணன், சிநேகா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் வசீகரா. படத்தில் விஜய் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து வேலை தேடும் நபராக நடித்திருப்பார். வடிவேலு மற்றும் விஜய்யின் ஆன்ஸ்க்ரீன் காமெடிக்காக இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. படம் குறித்து இயக்குநர் சில தகவல்களை அண்மையில் பகிர்ந்திருந்தார்.
படத்தில் இடம்பெறும் வசனம்
”வசீகரா படத்தின் கதை சொல்லும்போது விஜய்யிடம் அவர் நடித்த ஆறு பாடல்களின் வீடியோவைக் கொடுத்தேன்.அதைப் பார்க்கச் சொன்னேன். பார்த்துவிட்டு என்னவென்று கேட்டார். ஆறு பாடல்களிலும் ஹீரோயின் மட்டும் மாறி இருப்பார்கள். இவர் ஒரே மாதிரி இருப்பார்.அதைச் சுட்டிக்காட்டினேன். வசீகராவில் அவருக்கு புதுகெட்டப் வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொன்னேன். நான் காண்பித்த ஸ்டைல் சச்சின் டெண்டுல்கர் உடையது.அந்த ஹேர் ஸ்டைல் தனக்கு நல்லா இருக்குமா என அவருக்குத் தயக்கம். ரெண்டு நாள் டைம் கேட்டார். ரெண்டாவது நாள் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஓகே சொன்னார். வடிவேலு கதாப்பாத்திரத்துக்கு சரிநிகராக காமெடி எக்ஸ்பிரெஷன் தேவை.அதற்கு ஏற்றார்ப்போல அவருடைய ஸ்டைல் அந்தப் படத்தில் அமைந்தது. படத்தில் அவருடைய கேரக்டர் ஊரில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றத் தலைவர்.
படத்தில் எம்.ஜி.ஆர் விஜய் தோன்றும் காட்சி
அவர் வந்த பிறகு கட்டவுட்டுக்கு அபிஷேகம் செய்துவிட்டு படம் தொடங்குவது போல சீன். எம்.ஜி.ஆரையும் இந்தப் படத்தில் நடிக்க வைத்திருப்போம். கட்டவுட்டில் உள்ள எம்.ஜி.ஆர் நிஜமாகவே வருவது போல ஒரு காட்சி. கிராபிக்ஸ் டிசைனர் அதெல்லாம் செய்துடலாம் எனச் சொன்னார். நான் முதலில் கொஞ்சம் தயங்கினேன். இறுதி அவுட்புட் போய் பார்த்ததும் அசந்துவிட்டேன். நிஜமாகவே அங்கே எம்.ஜி.ஆர் இருந்தார்” என்கிறார்.
விஜய் ரசிகர்கள் இன்றுவரை அவரை அடுத்த எம்.ஜி.ஆர் என ஒருபக்கம் குறிப்பிட்டு வருவது இங்கே கவனிக்கத்தக்கது.