தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாராக உலா வருபவர் நடிகர் சிரஞ்சீவி. தமிழில் ரஜினிகாந்தைப் போல தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் சிரஞ்சீவி. இவரது மகன் நடிகர் ராம்சரண் தேஜா. மாவீரன், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் மூலமாக இந்திய அளவில் இவர் பிரபலமான நடிகராக உள்ளார்.


ஆட்டம் போட வைக்கும் கேம் சேஞ்சர் பாடல்:


இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்து வெளியீட்டிற்காக படம் தயாராக உள்ளது. இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கும் படம் என்பதாலும், ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பிறகு ராம்சரண் நடிக்கும் படம் என்பதாலும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.


இந்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ராம் மச்சா மச்சா என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தியிலும் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

தோல்வியில் இருந்து மீள்வாரா ஷங்கர்?


பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் வெற்றியை இயக்குனர் ஷங்கர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். ஏனென்றால் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்திற்கு வெளியான எந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை, ஐ, 2.0, இந்தியன் 2 என்று அவர் இயக்கிய படங்கள் பெரும் ஏமாற்றத்தையே அவருக்கு தந்தது. குறிப்பாக, கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் 2 மிகப்பெரிய தோல்வி படமாகவும், கடும் விமர்சனத்திற்கும் ஆளானது.


அடுத்தாண்டு இந்தியன் 3 படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பு கேம் சேஞ்சர் படம் வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் ராம்சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்பராஜ் எழுதியுள்ளார். படத்தின் வசனத்தை சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார்.


நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம்சரண் எவ்வாறு தேர்தலை நேர்மையான முறையில் நடத்தி காட்டுகிறார் என்பதே படத்தின் கதை ஆகும். இதற்கு ஷங்கர், விவேக் வேல்முருகன் இருவரும் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.