இந்தியாவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி கோயில் ஆகும். இந்தியாவின் பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதியில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகளவிலான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.


வைணவ தலங்களில் புரட்டாசி பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவம் நாளை மறுநாள் ( அக்டோபர் 2ம் தேதி) முதல் அக்டோபர் 12ம் தேதி  வரை நடத்தப்படும். திருப்பதியைப் பொறுத்தவரை கோயிலில் முக்கிய விழாக்கள் நடைபெறுவதற்கு முன்பு கோயிலில் தூய்மைப்படுத்தி, கோயிலில் உள்ள தெய்வங்களை புனிதப்படுத்தும் பணியைச் செய்வார்கள். இதற்கு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் என்று பெயர். இந்த தருணத்தில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தின்போது கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்கள், சிற்பங்கள், பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள், கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் புனித நீரால் சுத்தம் செய்யப்படும். இதை பரிமளம் என்று கூறுவார்கள். புரட்டாசி பிரம்மோற்சவம் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளதால் திருப்பதியில் நாளை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் செய்யப்பட உள்ளது.


இதன் காரணமாக திருப்பதியில் நாளை நான்கு மணி நேரம் அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்பட உள்ளது. கோயிலை சுத்தம் செய்வதற்கான பூஜை என்பதால் விஐபி பிரேக் தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, சிபாரிசு கடிதத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கான தரிசனமும் ரத்து செய்யப்படும் என்று தேவாஸ்தானம் அறிவித்துள்ளது.


நாளை நான்கு மணி நேரத்திற்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளதால், பக்தர்கள் அதற்கு ஏற்றாற்போல தங்கள் சாமி தரிசன திட்டத்தை முடிவு செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சனமானது புனித நீராட்டுதல் வைபவம் யுகாதி, ஆனிவார அஸ்தனம், வைகுண்ட ஏகாதசி, வருடாந்திர பிரம்மோற்சவம் ஆகிய நான்கு வைபவங்கள் தொடங்குவதற்கு முன்பு வரும் செவ்வாய்கிழமைகளில் நடத்தப்படுவது வழக்கம்.


நாளை செவ்வாய் கிழமை என்பதாலும், நாளை மறுாள் புரட்டாசி பிரம்மோற்சவம் தொடங்க இருப்பதாலும் நாளை கோயிலை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தின்போது கோயில் முழுவதும் தெளிக்கப்படும். இந்த  புனித நீரானது கற்பூரம், சந்தனம், மஞ்சள், குங்குமப்பூ ஆகியவை கலந்த வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டது. இந்த புனித நீரால் அனைத்து இடங்களும் தூய்மை செய்யப்படுகிறது.