தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்றால் அது ஷங்கர் தான். இவர் தற்போது இரண்டு படங்களை ஒரு சேர இயக்கி வருகிறார். அதாவது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படமும், ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படமும் இயக்கி வருகிறார்.


இன்று அதாவது ஜூலை 30ஆம் தேதி, தனது உதவி இயக்குநர்களுடன் தனது இயக்கத்தில் வெளியான முதல் படமான ஜென்டில் மேன் படம் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிறது என்பதால், அதனை கேக் வெட்டி கொண்ட்டடியுள்ளார். இந்த கொண்டாட்டம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு இயக்குநர் ஷங்கரின் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 


1993ஆம் ஆண்டு ஜென்டில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஷங்கர் இதுவரை மொத்தம் 12 படங்களை இயக்கியிருக்கிறார். தனது ஒவ்வொரு படங்களிலும் தனது தேடலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தவர் ஷங்கர். அவரது இந்தப் பயணத்தின் சில விமர்சனங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் சினிமாவை தொழில் நுட்பரீதியாக நவீனப்படுத்தியதற்கும் அதன் வணிகத்தை பெரிதாக்கியதற்கு ஷங்கரின் பங்கு மிகப்பெரிது. எந்த வகைகளில் என்று பார்க்கலாம். 






உள்ளூரில் ஹாலிவுட் சினிமா


 ஹாலிவுட் சினிமாக்களை வியந்து பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த மாதிரியான ஒரு பிரமாண்டத்தை நம் படங்களில் பார்த்துவிட மாட்டோமா? என்று ஏங்கியிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் ஷங்கர்.


தனது ஒவ்வொரு படத்திலும் தொழில் நுட்பரீதியாக மற்றும் கதைக்களத்தில் ஏதாவது ஒரு புதுமையை சேர்க்க நினைப்பவர் ஷங்கர். ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்களை ஒரே பாடலில் காட்சிபடுத்தியது, அதே படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் பாடலில்  இரண்டு ஐஷ்வர்யா ராயை ஒரே நேரத்தில் நடனமாட வைத்தது. இந்தியன் படத்தில் கமலை வயது முதிர்ந்த ஒரு கிழவராக ரசிகர்களை நம்பவைத்தது, காதலன் படத்தில் நடனமாடியபடி பிரபுதேவாவை ஓவியம் வரைய வைத்தது, அந்நியன் படத்தில் மூன்று வகையான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தியது, பாய்ஸ் படத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒரே பாடலில் நடனமாட வைத்தது,  நண்பன் படத்தில் அஸ்கு லஸ்கா பாடலில் ரயில்களுக்கு பெயிண்ட் அடித்து விட்டது. இப்படி அவர் படங்களில் எதார்த்தத்தை விட மிகையான அதே நேரத்தில் நாம் பார்த்து ரசித்த எத்தனையோ அம்சங்களை ரசிகர்களுக்கு கொடுத்தபடியே இருந்திருக்கிறார் ஷங்கர்.


டெக்னாலஜி பிரியன்


புதுமையான விஷயங்களின் மேல் ஆர்வம் கொண்டவராக எப்போது ஷங்கர் இருந்திருக்கிறார். வெறும் பிரம்மாண்டத்திற்கான மட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களில் பயண்படுத்தப்படும் தொழில் நுட்பங்களைப் பற்றிய அப்டேட்களை தெரிந்து வைத்துக்கொள்கிறார். இன்று பான் இந்திய சினிமா என்கிற வார்த்தை அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் இந்த வழக்கத்திற்கு முன்பாகவே தனது படங்களை இந்திய மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் ஆர்வம் ஷங்கருக்கு இருந்திருக்கிறது.


தன்னுடைய ஒவ்வொரு படத்திற்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். 2.0 படத்தை முழுவதுமாக 3டி-யில் எடுத்தார். தற்போது தான் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் கமலை இளைஞராக காட்ட டீ ஏஜிங் தொழில் நுட்பத்தைப் பயண்படுத்தி வருகிறார்.