சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


விமானத்தில் தொடரும் சர்ச்சை: 


இப்படி, சர்ச்சை மேல் சர்ச்சை வெடித்து வரும் சூழலில், மேலும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஆண் பயணி ஒருவர், சக பெண் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி, அந்த பெண் பயணியின் மகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நியூயார்க் நகரத்தில் உள்ள ஜே.எஃப்.கே விமான நிலையத்தில் இருந்து கிரீஸில் உள்ள ஏதென்ஸ் சென்ற விமானத்தில்தான், இந்த சம்பவம் நடந்துள்ளது. பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக அந்த பெண் புகார் அளித்த பிறகும், அந்த ஆண் பயணிக்கு விமான நிறுவன பணியாளர்கள், தொடர்ந்து மது வழங்கியுள்ளனர்.


இதை தொடர்ந்து, விமான நிறுவனத்திற்கு எதிராக பெண் பயணி புகார் அளித்துள்ளார். இந்த வழக்கில் விமான நிறுவனம் மிகவும் அலட்சியமாக செயல்பட்டதாக புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சிறுமியிடம் ஆபாசமாக நடந்து கொண்ட பயணி:


நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் அந்த ஆண் பயணி, ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், ஒன்பது மணி நேர விமான பயணத்தின்போது தகாத இடத்தில் தொட்டு பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பாலியல் வன்கொடுமை குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காமல், குடிபோதையில் இருந்த நபரை விமானத்தில் இருந்து வெளியேற ஊழியர்கள் அனுமதித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


"தாய் மற்றும் மகள் அமர்ந்திருந்த இருக்கை அருகேதான் குடிபோதையில் இருந்த இந்த பயணியும் அமர்ந்திருந்தார். மது கொஞ்சம் அருந்திய பிறகு, அந்த நபர் 16 வயது சிறுமியிடம் பேச முயன்றார். ஆனால், சிறுமி அவரிடம் பேசவில்லை. அந்த நபர் சிறுமியிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, அவரிடம் கத்த ஆரம்பித்தார்.


ஆபாசமான சைகைகளை செய்து, சிறுமியின் முகவரி மற்றும் அவரைப் பற்றிய பிற தகவல்களை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பின்னர், அந்த நபர் சிறுமியின் முதுகில் கைகளை வைத்து அவரை அச்சமூட்டியிருக்கிறார். சிறுமியின் தாய் தலையிட்டு, தனது மகள் மைனர் என்று அந்த நபரிடம் கூறினார். அந்த நபர் தான் கவலைப்படவில்லை என்று கூறி, அந்த பெண்ணின் கையை இழுத்தார்.


விமானப் பணிப்பெண்களை அணுகி, தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர்கள், பொறுமையாக இருங்கள் எனக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்" என புகாரில் கூறப்பட்டுள்ளது.