திரைப்பிலபங்கள் பதிவிடும் கருத்துகள் சமயத்தில் அவர்களுக்கே வினையாகிவிடுவது வழக்கமான ஒன்றுதான். அப்படித்தான் சமீபத்தில் இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து , அவருக்கு விவாகரத்தாக போகிறது என்ற பகீர் வதந்திகளை கிளப்பிவிட்டது. அதாவது ”இன்னொருவர் இருந்தால்தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி.” என குறிப்பிட்டிருந்தார்.
உடனே நெட்டிசன்கள் தனது மனைவியை குறித்துதான் செல்வராகவன் பதிவிட்டிருக்கிறார் போலும், ஒருவேளை விவாகரத்திற்கு தயாராகிவிட்டாரோ என சரமாரியாக பேச தொடங்கிவிட்டனர். அதன் பிறகு நமது எபிபி நாடு சேனலுக்கு தொலைபேசி வாயிலாக பதிலளித்த செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி , நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், வதந்திகளை பரப்பாதீர்கள் என அவருக்கான பாணியில் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால் அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !!” என குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழாக நெட்டிசன்கள் மீண்டும் கிசு கிசுக்க தொடங்கிவிட்டனர். சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தனது தம்பியான தனுஷிற்கு மறைமுகமாக செல்வராகவன் அறிவுரை கூறுகிறார் என நெட்டிசன்கள் மீண்டும் தங்கள் வேலையை காட்ட தொடங்கிவிட்டனர். செல்வராகவன் இது போன்ற தத்துவ பதிவுகளை ஷேர் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் , அதனை வேறு மாதிரியாக ட்விஸ்ட் செய்வதே டிவிட்டர்வாசிகளுக்கு வழக்கமாகிவிட்டது.
செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் ‘ராயன்’ என்ற திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது.செல்வராகவனின் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தில் தனுஷ் நடிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அதற்குள் தனுஷை வைத்து இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் என்ற படத்தை இயக்க போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார். சில காரணங்களால் படத்தின் தலைப்பை மாற்ற தயாரிப்பாளர் தாணு, செல்வராகவனிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தலைப்பு மட்டுமின்றி கதைக்களத்திலும் பல மாற்றங்களுடன் ’ராயன்’ என்ற தலைப்பில் அந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. செல்வராகவன் தற்போது சாணிகாயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். அதே போல விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.