நடிகை மனிஷா யாதவ் சினிமாவை விட்டு விலகியதற்கு தான் காரணம் என வெளியான தகவலுக்கு இயக்குநர் சீனு ராமசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். 


ஒருபக்கம் நடிகை த்ரிஷாவை மன்சூர் அலிகான் தகாத முறையில் பேசியது, மறுபக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா சினிமாவில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்தது என கடந்த சில தினங்களாகவே திரையுலகில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது சக திரையுலகினரும் இத்தகைய விஷயங்களுக்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். 


இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி சினிமாவில் பல நடிகர்களும், இயக்குநர்களும் நடிகைகளை மோசமாக தான் பார்க்கின்றனர் என்றும், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை காரணமாக நடிகைகள் சினிமாவை விட்டு விலகி செல்லவும் அவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக இளம் நடிகை மனிஷா யாதவ் சினிமாவை விட்டு போனதற்கு இயக்குநர் சீனு ராமசாமி  தான் காரணம் என தெரிவித்துள்ளார். 






பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் நடிகையாக அறிமுகமானார் மனிஷா யாதவ். முதல் படத்தில் மிகவும் தைரியமான ஒரு கேரக்டரில் நடித்து ரசிகர்களிடத்தில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ஜன்னல் ஓரம், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட படங்களில் நடித்த மனிஷா யாதவ் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். 


இப்படியான நிலையில் மனிஷாவை இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய “இடம் பொருள் ஏவல்” படத்திற்காக ஒப்பந்தம் செய்ததாகவும், இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்றதாகவும் பிஸ்மி நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஒரு வாரம் மட்டுமே அந்த படத்தில் மனிஷா யாதவ் நடித்தார், அந்த நாட்களில் சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனை மனிஷா தனக்கு போன் மூலம் தெரிவித்ததாகவும், எல்லா ஆதாரமும் இருப்பதாகவும் பிஸ்மி கூறியுள்ளார். 


சீனு ராமசாமியால் தான் மனிஷா சினிமாவை விட்டே விலகி விட்டார் என்றும் கூறியுள்ளார். அவரின் இன்னொரு முகம் தான் இது எனவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிவில், ”ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ”வை பதிவிட்டுளார். மேலும், “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க” எனவும் தெரிவித்துள்ளார். 


சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. மனிஷா நடித்த கேரக்டரில் கடைசியில் நடிகை நந்திதா ஸ்வேதா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.