சிறு வயது முதலே ஓவியம் மீது தீராத காதல் கொண்ட ஒரு இளைஞனாக  ஏராளமான பரிசுகளை குவித்த கலைஞனாக தனது கலைபயணத்தை துவங்கியவர் இயக்குநர் சிம்புதேவன். ஒரு கார்ட்டூனிஸ்டாக இருந்து தன்னுடைய அபாரமான திறமையால் தனக்கு அமைந்த முதல் வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு வெற்றி கண்ட சிம்புதேவனின் பிறந்தநாள் இன்று. 


தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக சிம்புதேவன் அறிமுகமான முதல் படம் தான் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'. இப்படம் இன்று மட்டுமல்ல என்றுமே ஆல் டைம் ஃபேவரட் காமெடி படமாக இருக்கும் என்பதில் என்ற  சந்தேகமும் இல்லை. தன்னுடைய முதல் படத்தையே பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை வைத்து தயாரிக்கும் அளவுக்கு அவரின் திரைக்கதை கவனம் ஈர்த்தது. 


 



 


உதவி இயக்குநராக இருந்தவர் சுதந்திரமாக இயக்கிய முதல் படமே அடி தூள் ரகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வடிவேலுவை ஹீரோவாக அறிமுகமாகிய இயக்குநர் என்ற பெருமையையும் பெற்றார். சிம்புதேவனின் ரசிக்க வைக்கும் கதைக்களமும் வடிவேலுவின் மட்டற்ற நகைச்சுவையும் அதகளம் செய்து படத்தை வெற்றிப்பாதைக்கு நகர்த்தியது. ஒரு கற்பனை மன்னர் ஆட்சி என்றாலும் அந்த காலகட்டத்தை கண்முன்னே அப்படியே கொண்டு வந்து நிறுத்தினார். 


சிம்புதேவனின் இரண்டாவது படமான "அறை எண் 305 -இல் கடவுள்" படமும் வெற்றி நடைபோட்ட ஒரு முழுநீள நகைச்சவை கலந்த ஃபேன்டஸி திரைப்படம். ஒரு படைப்பாளி என்றால் அவரின் கற்பனை எந்த அளவிற்கு இருக்கும் என வெளிக்காட்டிய ஒரு திரைப்படம். மனிதனின் புலம்பல் கடவுளுக்கு கேட்டுவிடுகிறது. உடனே அவர் மனிதனை பார்க்க நேரடியாக பூமிக்கு வருகிறார். அதற்கு பின்னர் என்ன நேர்கிறது என்பதை மிகவும் ஸ்வாரஸ்யம் கலந்த கற்பனை கதையாக மிக சிறப்பாக கையாண்டு இருந்தார் சிம்புதேவன். 


அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான 'இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்' ஒரு வித்தியாசமான நகைச்சுவை படமாக கொடுத்து இருந்தார். கவுபாய் கலாச்சாரத்தை படம்பிடித்து ரசிகர்களை கவர்ந்தது. சிம்புதேவனின் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான முதல் இரண்டு படமும்  சக்கைபோடு போட்டதால் மூன்றாவதாக வந்த இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. வித்தியாசமான முயற்சி என்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 


அதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கிய ஒரு கன்னியும் மூன்று களவாணியும், புலி, கசட தபற உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். வெவ்வேறு கதைக்களங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் வித்தியாசம் காட்டிய சிம்புதேவன் மீண்டும் முழு வீச்சில் இறங்கி புலிகேசி மாதிரியான பேண்டஸி படங்களை இயக்க வேண்டும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிம்புதேவன்..!