தான் படம் தயாரிப்பதை நிறுத்த நடிகர்கள் சிவகுமாரும், ரஜினியும் தான் காரணம் என நடிகர் சசிகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


இயக்குநர் பாலு மகேந்திரா, பாலா, அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சசிகுமார். 2007 ஆம் ஆண்டு வெளியான சுப்பிரமணியபுரம் மூலம் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என 3 துறைகளிலும் முத்திரை பதித்தார். தொடர்ந்து போராளி, ஈசன், தலைமுறைகள், தாரை தப்பட்டை, பலே வெள்ளையத்தேவா, தலைமுறைகள், கொடி வீரன் என சில படங்களை தயாரித்தார். 


இயக்குநராக சுப்பிரமணியபுரம் மற்றும் ஈசன் படங்களை இயக்கிய சசிகுமார் அதன்பிறகு எந்த படமும் இயக்கவில்லை. அதேபோல் 2017 ஆம் ஆண்டு வெளியான கொடி வீரன் படத்துக்கு பிறகு எந்த படம் தயாரிக்கவில்லை. முழுநேர நடிகராக வலம் வருகிறார். அவரை மீண்டும் படம் இயக்கச் சொல்லி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சசிகுமார், தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி விரிவாக பேசியுள்ளார். 


அதில், “எல்லாருமே தயாரிப்பாளராக, இயக்குநராக, நடிகராக ஆகி விட முடியாது. எங்களால மாறி ஆளுக்கு அது செட்டாகி விடாது. எல்லாவற்றையும் இணைத்து ஒரே நேரத்தில் வேலை பார்க்க முடியாது. ஒருமுறை நான் விமானத்தில் செல்லும்போது என்னுடன் சிவகுமார் பயணித்தார். அவர் தான் என்னை படம் தயாரிப்பதை நிறுத்த சொன்னார். நீ நடிகன்யா அதுதான் சொல்கிறேன். என்னுடைய பசங்களுக்கு அதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். என்ன தான் நீ  படம் தயாரித்தாலும் இவர்களுக்கு இவ்வளவு பணம் தர வேண்டுமே என்ற எண்ணம் கேமரா முன்னாடி வரும் போது ஒரு இடத்தில் முகத்தில் வெளிப்பட்டு விடும். அந்த எண்ணம் உனக்குள் வந்து விட்டால் நடிக்க முடியாது என சிவகுமார் கூறினார். அதேபோல் ரஜினியும் என்னை அழைத்து நடிங்க, படம் தயாரிக்காதீங்க என சொன்னார். ஏனென்றால் இரண்டையும் சேர்த்து செய்வது என்பது கடினமான ஒன்று” என சசிகுமார் தெரிவித்துள்ளார். 


கருடன் படம் 


இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “கருடன்”. இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்துள்ள இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா, ஷிவதா, சமுத்திரகனி, ராஜேந்திரன், மைம் கோபி என பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கருடன் படம் நாளை (மே 31) வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.