சந்தீப் ரெட்டி வங்கா

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் சர்ச்சைக்குரிய இயக்குநராக பேசப்பட்டவர் சந்தீப் ரெட்டி வங்கா. தொடர்ந்து கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகிய அனிமல் படத்தை இயக்கியிருந்தார். அர்ஜூன் ரெட்டி படத்தை விட இருமடங்கு விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு குவிந்தன. நடிகர்கள், இயக்குநர்கள் , பாடலாசிரியர்கள் , விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினர் இந்தப் படத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். தன் படத்தை விமர்சனம் செய்த ஒவ்வொருவரையும் பதிலுக்கு விமர்சனம் செய்தார் சந்தீப் ரெட்டி வங்கா. 

பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட்

அனிமல் படத்தைத் தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படத்தை இயக்கி வருகிறார் வங்கா. பாலிவுட் நடிகை தீபிகா படூகோன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் இயக்குநர் மற்றும் தீபிகா இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து தீபிகா விலகினார். தீபிகா தரப்பில் இருந்து பல்வேறு நிபந்தனைகள் கூறப்பட்டதால் அது இயக்குநருக்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் இருவரும் பரஸ்பரம் பேசி தீபிகா படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. 

தீபிகாவைத் தொடர்ந்து அனிமல் படத்தில் நடித்து பிரபலமான திருப்தி டிம்ரி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பி.ஆர் வைத்து தாக்கினார் தீபிகா

தற்போது ஸ்பிரிட் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது எக்ஸ் பக்கத்தில் தீபிகா படுகோனை விமர்சித்து பதிவிட்டுள்ளார். " ஒரு நடிகை நம்பிதான் அவரிடம் நான் கதை சொல்கிறேன். பல வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு கதையை நான் எழுதுகிறேன். ஆனால் நீங்கள் என் பட நடிகையை மட்டம்தட்டி படத்தின் கதையை  வெளியே சொல்லிவிட்டீர்கள். இதுதான் உங்கள் பெண்ணியவாதமா. எனக்கு சினிமா தான் எல்லாமே. உங்களுக்கு அது புரியவில்லை. புரியவும் புரியாது. அடுத்த முறை முழு கதையையும் சொல்லுங்கள். நீங்களும் உங்களுடைய சீப்பான பி.ஆர் விளையாட்டுக்களும் " என அவர் தெரிவித்துள்ளார்