தங்கலான்


பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியானது. மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி , டேனியல் கால்டகிரோன் , அர்ஜூன் , ஆனந்த் சாமி , ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


பட்டியலின மக்கள் பூர்வ பெளத்தர்கள் என்று முன்வைத்த அயோத்தி தாசரின் வரலாற்றாய்வுகளை அடிப்படையாக கொண்டு தங்கலான் படத்தின் கதையை அமைத்துள்ளார் ரஞ்சித் . ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கோலார் தங்க வயல்களில் இருந்த தங்கத்தை எடுக்க அப்பகுதியின் வசித்த பறையர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் போராட்டங்களையும் அம்மக்களின் வாய்மொழிக் கதைகளை இணைத்து மேஜிக்கல் ரியலிஸம் ஜானரில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். 


ரஞ்சித்தின் தனித்துவமான காட்சியமைப்புகள், ஜி.வி பிரகாஷின் இசை, சீயான் விக்ரம் , பார்வதி திருவொத்துவின் வியக்க வைக்கும் நடிப்பு இப்படத்தின் பிளஸ். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப் பட்டிருக்கும் தங்கலான் படத்திற்கு தென் இந்திய ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது.


 நெகட்டிவ் விமரசனங்கள்


திரைக்கதை ரீதியாக படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மற்றொரு தரப்பு கும்பல் பா ரஞ்சித் இப்படத்தில் பேசியிருக்கும் அரசியலை விமர்சித்தும் தங்கலான் படத்தை நெகட்டிவாக ப்ரோமோட் செய்தும் வருகிறார்கள். இப்படியான நிலையில் மேயாத மான் , குலுகுலு ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமார் தனது எக்ஸ் தளத்தில் தங்கலான் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக படம் புரியவில்லை என்று படத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு ரத்னகுமார் தனது பதிவில் பதிலளித்துள்ளார்.


தங்கலான் படத்தை பாராட்டிய ரத்னகுமார்


தனது பதிவில்  ‘ தங்கலான் இந்திய சினிமாவின் பெருமை. புனையப்பட்ட வரலாறு என தெரிந்தும் காலம் காலமாக பூதம் காத்து வந்த கள்ளமௌனிகள் மீது தங்க கல்லை வீசி இருக்கிறான் தங்கலான். இப்படியான ஒரு அபூர்வமான அனுபவத்தை கொடுத்ததற்காக இயக்குநர் ரஞ்சித் மற்றும் படக்குழுவிற்கு நன்றி. கலைத்துவமான படங்களை ஆதரிப்பதற்கு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றி.  சீயான் விக்ரம் நீங்கள் நடித்ததிலேயே சிறந்த படம் இது. அதேபோது ஜி.வி பிரகாஷ் நீங்கள் இசையமைத்த படங்களில் சிறந்த படம் தங்கலான் . இந்த படத்தை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை. தயவு செய்து எல்லாரும் படத்தை பாருங்கள் 






வெள்ளக்காரன் சொன்னத ஒருத்தன் மாத்தி தப்பா சொல்றான்னு மொழி புரியாட்டியும் தங்கலானுக்கு புரியும்போது. தங்கலான் பேசுறது நமக்கு புரியும், புரியணும். புரியாட்டியும் பரவாயில்ல அவன் பேசிட்டேதான் இருப்பான்.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.