ஜெய ஹோ பாடலை பாடகர் சுக்விந்தர் சிங் தான் இசையமைத்ததாக ராம் கோபால் வர்மா (Ram Gopal Varma) தெரிவித்துள்ளார்.


ஏ.ஆர் ரஹ்மான் (A R Rahman)


ஆஸ்கர் நாயகன் என்கிற பட்டத்தை  ஏ.ஆர் .ரஹ்மானுக்கு பெற்றுத் தந்த படம் 'ஸ்லம்டாக் மில்லியனர்' (Slumdog Millionaire). இப்படத்தில் இடம்பெற்ற 'ஜெய ஹோ' பாடலுக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு கோல்டன் க்ளோப் விருது என பல விருதுகளை வென்றார் ரஹ்மான். அதே நேரம்  இந்தப் படத்திற்கு பின் சர்வதேச அளவில் ரஹ்மானின் மார்கெட் பல மடங்கு உயர்ந்தது. அப்படியான ஒரு பாடல் உண்மையில் ரஹ்மான் இசையமைத்ததே இல்லை என்று தற்போது கருத்து தெரிவித்துள்ளார் பிரபல பாலிவுட் மற்றும் டோலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா.


ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ராம் கோபால் வர்மா


சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராம் கோபால் வர்மா, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் ஜெய் ஹோ பாடலுக்கு உண்மையில் ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும், பிரபல பாடகர் சுக்விந்தர் சிங் தான் அந்தப் பாடலுக்கு இசையமைத்தார் என்றும் கூறினார். இதற்கு பின்னணியாக கதை ஒன்றையும் அவர் இந்த நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.


"தாளம் படத்தின் இயக்குநர் சுபாஷ் கய் இயக்கவிருந்த அடுத்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்க இருந்தார். அந்தப் படத்திற்காக கோடிக்கணக்கில் அவருக்கு சம்பளம் பேசப்பட்டது. ஆனால் ரஹ்மான் இந்தப் படத்திற்கு சுக்விந்தர் சிங்கை இசையமைக்கச் சொன்னார். இது தெரிந்த இயக்குநர் சுபாஷ் கய் “நான் கோடிக்கோடியாக உனக்கு சம்பளம் கொடுத்து இசையமைக்கச் சொன்னால், நீ வேறு ஒருத்தரை வைத்து என் படத்திற்கு மியூசிக் போடச் சொல்றியா?” என்று கோபப்பட்டார்.


‘இசை எங்கிருந்து வந்தால் என்ன..’


இதற்கு ரஹ்மான் மிக நிதானமாக ஒரு பதில் கொடுத்தார். “நீங்கள் எனக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுப்பது என்னுடைய பெயருக்காக. என்னுடைய இசைக்காக இல்லை. உங்களுக்கு மியூசிக் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள், ஆனால் அந்த மியூசிக் எங்கிருந்து வருகிறது என்பது எல்லாம் உங்களுக்கு எதற்கு? உங்களுடைய முந்தைய படத்திற்கு நான் தான் இசையமைத்தேன். அந்தப் படத்தின் எல்லா பாடல்களுக்கும் உண்மையாக நான் தான் இசையமைத்தேன் என்று நினைக்கிறீர்களா? என்னுடைய டிரைவர் கூட மியூசிக் போட்டிருக்கலாம்” என்று ரஹ்மான் பதிலளித்தார். 


தான் இசையமைத்த பாடலைப் பற்றி சுக்விந்தர் சிங் ரஹ்மானிடம் கேட்டபோது அதை தான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பயன்படுத்தி விட்டதாக ரஹ்மான் கூறினார். அந்தப் பாடல்தான் 'ஜெய ஹோ'" என்று ராம் கோபால் வர்மா நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.


ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி ராம் கோபால் வர்மா பகிர்ந்துள்ள இந்தத் தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரஹ்மான் என்ன விளக்கம் தரப்போகிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.