‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் உதயநிதியை நடிகராக மாற்றியது எப்படி என்பது குறித்து இயக்குநர் ராஜேஷ் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து பேசியிருக்கும் அவர், “ உதயநிதி அப்போது ‘ஆதவன்’ படத்தில் ஒரு சின்ன காட்சியில் நடித்து இருந்தார். தைரியமாக சூர்யா சாருடன் நின்று கேமாரவை எதிர்கொண்டுவிட்டார். அதனால் அவரை கொஞ்சம் தயார்படுத்தினால் நடிகராக்கி விடலாம் என்று நினைத்தேன். அதனால் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் அவரை நடிக்க வைப்பதற்கு முன்னால், டயலாக்கோடு சேர்ந்து அவரை பலமுறை நடிக்க வைத்து பயிற்சி கொடுத்தோம்.
அப்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு எனக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அதற்கு காரணம் ஆதவனில் அவரிடம் ஒரு பயம் இருந்தது. ஆனால் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரிடம் பயமே இல்லை. எவ்வளவு நீளமான வசனங்களாக இருந்தாலும் அதை கஷ்டப்படாமல் பேசி விடுவார். அதன் பின்னர்தான் சந்தானம் உள்ளே வந்தார். சந்தானத்திடம் உள்ள பெரிய ப்ளஸ் என்னவென்றால், அவர் உடன் யார் நடித்தாலும், அவரை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்குவார். நிறைய விஷயங்களை அவரே சொல்லிக்கொடுப்பார். பின்னர் படத்தை எடுத்து முடித்துவிட்டோம்.
படத்தை பார்த்து முடித்த போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த நாள் ஸ்டாலின் சார், அவரது மனைவி மற்றும் அவர்களது உறவினர் ஒருவர் என மூன்று பேர் படம் பார்த்தனர். படம் பார்த்த அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று உதயநிதி என்னிடம் வந்து சொன்னார். படம் வெளியானது. அப்போது வெளியூரில் இருந்த ஸ்டாலின் சார் படத்தை அங்கிருந்த திரையரங்கு ஒன்றில் படத்தை பார்த்து இருக்கிறார். அங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். அதன் பின்னர் ஸ்டாலின் சார், அன்று என்னுடைய கணிப்பு தவறாக அமைந்து விட்டது. ஆனால் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார்.” என்று பேசினார்.
இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத விநியோகஸ்தராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், சூர்யா நடித்த ஆதவன் படத்தை தயாரித்ததோடு, அதில் இடம் பெற்ற கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருந்தார். அதன் பின்னர் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். சந்தனாமும், இவரும் அடித்த காமெடிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி விட, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தொடர்ந்து ‘இது கதிர்வேலன் காதல்’ ‘ நண்பேண்டா’ ‘கெத்து’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் பெரும்பான்மையான படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், மிஷ்கினின் இயக்கிய சைக்கோ படத்தில் நடித்தார். இந்தப்படம் வெற்றி பெற்றதோடு, உதயநிதி ஸ்டாலினின் நடிப்பும் அதில் பாரட்டப்பட்டது. கடைசியாக இவரது நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘ நெஞ்சுக்கு நீதி’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பிரசார சூறாவளியாக வலம் வந்த உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.