இட்லி கடை
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. நித்யா மேனன், ராஜ்கிரண் , சத்யராஜ் , ஆர் பார்த்திபன் , அருண் விஜய் , ஷாலினி பாண்டே ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இட்லி கடை படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 14 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இட்லி கடை படத்தில் தனுஷ் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து இயக்குநர் பார்த்திபன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
தனுஷை புகழ்ந்த ஆர் பார்த்திபன்
தனுஷ் குறித்து பேசியபோது " இட்லி கடை செட்டிற்கு போனால் நான் தனுஷை ரொம்ப ரசிக்கிறேன். நான் பார்த்ததிலேயே விக வேகமான இயக்குநர் தனுஷ். ஒரு நாளில் 2 சீன் தான் எடுத்த வேண்டும் என்றால் அந்த இரண்டு சீனை அழகாக எடுத்துவிடுவார். செட்டில் நிறைய பெரிய நடிகர்கள் இருந்தாலும் அவர் நடித்து காட்டி எனக்கு இப்படிதான் வேண்டும் என கேட்கிறார். அவரும் என்னைப் போலவே ஒரு காட்சியை எல்லாரும் இப்படிதான் எடுப்பார்கள் என்றால் அதை ஏன் நாம் புதுமையாக எடுக்க கூடாது என முயற்சிக்கிறார். இதனால் அங்கு போனால் எனக்கு உற்சாகம் தருகிறது. அவரிடம் நான் ரொம்ப ரசித்த ஒரு விஷயம் என்றால் பேட் , பேப்பர் பேனா என்று எதுவுமே கிடையாது. அழகா வந்து ரெண்டு பெரிய காட்சிகளை எடுத்துவிடுவார். ஆங்கில படத்தில் நடிக்கிறார். இந்தி படத்தில் நடிக்கிறார். தமிழ் படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் ஒரு படத்தை இயக்கி முடித்துவிடுகிறார். இவ்வளவு வேகம் என்னிடம் கிடையாது. அந்த வேகத்தை பார்த்து நான் ரொம்ப ரசிக்கிறேன்" என பார்த்திபன் கூறியுள்ளார்.