ஐசரி கணேஷ் தயாரிப்பில் விக்ரமின் 64 ஆவது படத்தை பிரேம்குமார் இயக்கவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக ஃபகத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்
ஃபகத் ஃபாசிலை இயக்கும் பிரேம்குமார்
96 படத்தின் மூலம் பெரியளவில் பேசப்பட்டவர் இயக்குநர் பிரேம்குமார். கடந்த ஆண்டு கார்த்தி அரவிந்த் சாமி இணைந்து நடித்த மெய்யழகன் படத்தை இயக்கினார். அடுத்தபடியாக விக்ரமை வைத்து முழுக்க முழுக்க ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவிருபப்தாக தகவல்கள் வெளியாகின. வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் படத்தின் அறிவிப்பை வெளியிட்டது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு வேலைகள் தொடங்க இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அடுத்தபடியாக ஃபகத் ஃபாசில் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.
" நான் இதுவரை இயக்கிய படங்களைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இந்த படம் இருக்கும். விக்ரமுடன் இயக்கவிருந்த படத்திற்கு இன்னும் சில காலம் கூடி வர வேண்டும். இப்போது நான் எழுதி வரும் கதைக்கான ஐடியா வந்து எனக்கு 4 வருடங்கள் ஆகிவிட்டன. ஏற்கனவே நான் ரொம்ப மென்மையான படம் எடுக்கும் இயக்குநர் என்கிற இமேஜ் உருவாகிவிட்டது. அதை மாற்றும் விதமாக இந்த படத்தை எடுக்கலாம் என நினைத்தேன். கதையாக 40 நிமிடம் ஃபகத் ஃபாசிலுக்கு சொன்னேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. ஜனவரி முதல் படப்பிடிப்பிற்கு செல்ல திட்டமிட்டிருக்கிறோம்' என பிரேம் குமார் தெரிவித்துள்ளார்
தமிழில் ஃபகத் ஃபாசில் வேலைக்காரன் , சூப்பர் டீலக்ஸ் , மாமன்னன் , வேட்டையன் , சமீபத்தில் வெளியான மாரீசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தைப் போலவே தமிழில் ஃபகத் ஃபாசிலுக்கு பெரியளவில் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். பிரேம்குமார் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பது பலரது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.