நேபாளத்தில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. குடியரசுத் தலைவராக ராம் சந்திரா பவுடல் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அங்கு இளைஞர்கள் புரட்சி வெடித்தது. கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பிரதமர் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜனாதிபதியும் ராஜினாமா செய்ததால், அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நேபாளத்தில் நடப்பது என்ன.?

ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நேபாளத்தில் நிலவி வரும் சூழலில், அங்கு இளைஞர்கள் புரட்சி வெடித்தது. அது பரவாமல் இருப்பதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, நேபாளத்தில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்படாத இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சமூக வலைதள செயலிகளை அந்நாட்டு அரசு முடக்கியது.

இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தை குவித்தது அந்நாட்டு அரசு. அப்போது, ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.

இதனால், போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சமூக வலைதள செயலிகள் மீதான தடை நீக்கப்பட்டது. அதேசமயம், நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

ராஜினாமா செய்த பிரதமர்

நேபாள பிரதமர் ச்ர்மா ஒலி பதவி விலகக் கோரி 2-வது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, குடியரசுத் தலைவர், பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், விமான நிலையம் அருகேயும் தீ வைக்கப்பட்டதால், விமான சேவை முடங்கியது.

இதைத் தொடர்ந்து, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுபேற்று பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேற்று உள்துறை அமைச்சர் ராஜினாம செய்த நிலையில், இன்று பிரதமர் பதவி விலகினார். இதனால், நேபாள அரசு கவிழ்ந்துள்ளது. அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியும் ராஜினாமா

இப்படிப்பட்ட சூழலில், பிரதமர் சர்மா ஒலியைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திரா பவுடலும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், நேபாள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரும் ராஜினாமா செய்ததால், நேபாளம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது.

ஏற்கனவே இதேபோல், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கையிலும், வங்கதேசத்திலும் மக்கள் போராட்டத்தால் ஆட்சிகள் கலைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.