கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்ட பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்.பால்கி திரைப்படங்களின் வெற்றி தோல்விகள் குறித்து பேசியுள்ளது திரையுலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. 


கோவாவில் ஆண்டுதோறும்  சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் உலகம் முழுவதும் வெளியான சிறந்த படங்கள் திரையிடப்படும். இந்தியாவை பொறுத்தவரை இப்படியான திரைப்பட திருவிழாக்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவது உண்டு. அந்த வகையில் இந்தாண்டுக்கான கோவா சர்வதேச திரைப்பட திருவிழா கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 






இதில் கலந்து கொண்ட பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ஆர்.பால்கி திரைப்படங்களின் வெற்றி தோல்விகள் குறித்து ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பாக்ஸ் ஆபீஸில் தோல்வியடையும் அல்லது பல படங்கள் வெற்றிபெறாததற்கு காரணம் அந்த படங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியாமல் இருப்பது தான். நான் இயக்கிய சுப் என்ற ஒரு திரைப்படம் இருப்பது இங்கு பலருக்கும் தெரியாது. 




பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது நண்பர்களை நான் சந்தித்த போது, அவர்கள் என்னிடம், நீங்கள் அடுத்து என்ன செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு நான் இப்போது தான் ஒரு படம்  இயக்கினேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அப்படியா அதிர்ச்சியாக பதிலளித்தார்கள். எனக்கு அது அதிர்ச்சியாகவே இருந்தது.  பல படங்கள் வாய் வார்த்தையாக மட்டுமே விளம்பரம் செய்யப்படுவதை நான் வெறுக்கிறேன். இதற்கு பின்னால் சரியான செயல்முறை இருக்க வேண்டும். சொல்லப்போனால் கண்டுபிடிப்புகளின் பற்றாக்குறை நிறைய படைப்பாற்றலைத் தடுக்கிறது என்று நான் நினைக்கிறேன்.


நீங்கள் 100 படங்கள் தயாரித்து அதில் 90 படங்கள் வசூலை ஈட்டவில்லை என்றால், கண்டிப்பாக சினிமாவில் ஏதோ தவறு இருக்கிறது என்றே அர்த்தம்.  சினிமாவில் புத்திசாலித்தனமான சந்தைப்படுத்துபவர்களும் உள்ளனர். அதேசமயம் எதையும் கற்காமல் விழுந்து விடுகிறவர்களும் உண்டு.  திரைப்படங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு எந்த ஃபார்முலாவும் கிடையாது. யார் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்துதான் எல்லாம் உள்ளது என பால்கி தெரிவித்துள்ளார். 


பால்கி இதுவரை சீனி கம், பா, ஷமிதாப், கி அண்ட் கா, பேட் மேன், சூப் ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதில் ஷமிதாப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சனுக்கு இணையான கேரக்டரில்  நடிகர் தனுஷூம் நடிக்க வைத்ததோடு, தனது சில படங்களில் இசையமைப்பாளராக இளையராஜாவுடன் பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.