சமீபத்தில் அமேசான் ப்ரைம் தளத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நடிகர் மோகன்லாலின் அடுத்த படம் மலையாளத் திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 25 ஆண்டுகளாகத் தனது கனவுத் திரைப்படமாக இருந்த `மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ என்ற தலைப்பில் இந்தப் படத்தை இயக்கிய தேசிய விருது பெற்ற மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். 


பெரும் பொருட்செலவில் பீரியட் படமாக உருவாகியுள்ள `மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் நடிகர் மோகன்லால் முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் தளத்திற்கு விற்பனை செய்துள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஆண்டன் பெரும்பாவூர் அறிவித்தது, மலையாளத் திரையுலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள படத்தின் இயக்குநர் பிரியதர்ஷன், ``மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ படம் மலையாள சினிமாவிற்குப் பெரியது எனவும், ஓடிடி தளத்தில் வெளியாகாமல் போனால் மீண்டும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் கஷ்ட காலத்திற்குள் நுழைய வேண்டி வரும் எனவும் அதற்கு சம்மதித்ததாகத் தெரிவித்துள்ளார். 



மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்


 


`கடந்த 25 ஆண்டுகளாக நானும், நடிகர் மோகன்லாலும் கொஞ்சம் கொஞ்சமாக கனவு கண்டு உருவாக்கிய திரைப்படம் இது. நாங்கள் இருவரும் டப்பிங் ஸ்டூடியோவில் கடைசியாக பார்த்துக் கொண்ட போது, திருவனந்தபுரத்தின் திரையரங்கம் ஒன்றில் இருவரும் அடுத்தடுத்து அமர்ந்து இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்’ என முடிவு செய்துகொண்டோம்’ என `மரைக்கார்: அரபிக் கடலிண்டே சிம்ஹம்’ மீதான தனது உறவைக் குறித்து கூறியுள்ளார் இயக்குநர் பிரியதர்ஷன்.



மோகன்லாலுடன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்


 


`இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மிக எளிய பின்னணியில் இருந்து, எதுவுமின்றி இந்த நிலைக்கு வந்திருப்பவர். `மரைக்கார்’ படத்திற்காக அதிகளவில் தொகையை முதலீடு செய்து அவர் தனது உயிரை பணயம் வைத்திருக்கிறார். என்னையும், நடிகர் மோகன்லாலையும் மட்டும் நம்பி அவர் இவ்வாறு முடிவு எடுத்தார். நானும், நடிகர் மோகன்லாலும் சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல், படம் வெற்றி பெற்ற பிறகு, எங்கள் பங்கைப் பெற்றுக் கொள்வதாக அவரிடம் கூறினோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக, `மரைக்கார்’ படத்திற்காக பெற்ற கடனை அடைக்க ஆண்டனி மிகப்பெரிய தொகை ஒன்றை வட்டியாக செலுத்தி வருகிறார். எங்கள் இருவரில் யாரேனும் ஒருவர் ஆண்டனியிடம் படத்தைத் தியேட்டரில் வெளியிடுமாறு அழுத்தம் கொடுத்திருந்தால், அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கும். நாங்கள் இருவரும் அவ்வாறு செய்ய மாட்டோம். ஆண்டனி நஷ்டமடைந்த பிறகு, எங்கள் இருவராலும் எங்கள் கனவுத் திரைப்படம் வெளியான மகிழ்வைக் கொண்டாட முடியாது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாததில், அதிக வருத்தம் கொள்பவர்கள், நானும், மோகன்லாலும், ஆண்டனியும் தான்’ என்று கூறி, இந்தப் படம் மீதான சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.