சென்னை மழையால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு நடிகர் விஷால் உணவு மற்றும் குடிநீர் வழங்கியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருப்பதன் எதிரொலியாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் கனமழை கொட்டிவருகிறது. தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வரும் மழையால் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது.
மக்கள் அனைவரும் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த மழையால் புறநகர் மற்றும் நகரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. மேலும், சாலையோரத்தில் இருக்கும் ஆதரவற்ற மக்கள் மழையால் உணவி இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு நடிகர் விஷால் தனது அறக்கட்டளையின் மூலம் உணவு வழங்கி அவர்களின் வயிற்றை நிரப்பியுள்ளார்.
விஷால் - ஆர்யா நடிப்பில் உருவான ‘எனிமி’ திரைப்படம் கடந்த தீபாவளிக்கு தியேட்டரில் வெளியானது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் வெற்றிக்கொண்டாத்தை கோலகலமாக கொண்டாட நடிகர் விஷால், ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்துள்ளார். தனது தேவி அறக்கட்டளை மூலம் இன்று மினி வேனில் சென்று சாலைகளில் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீரும் வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, சமூகவலைதளங்களில் விஷாலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் விஷால் அம்மா தேவி பெயரில் தேவி என்ற அறக்கட்டளை சில வருடங்களுக்கு தொடங்கினார். இதன் மூலம் பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர மக்களுக்கு உணவு கொடுத்தார். மேலும், தனது பிறந்தநாள் அன்று குழந்தைகள் காப்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கி அவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடினார்.
முன்னதாக, எனிமி பட நிகழ்ச்சி ஒன்றில், மறைந்த பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாரால் கல்வி உதவி பெற்று வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை தானே ஏற்பதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்