96


பிரேம்குமார் இயக்கி விஜய் சேதுபதி த்ரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. கோவிந்த வசந்தா இப்படத்திற்கு இசையமைத்தார். ராம் ஜானு பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வருகிறார்கள். ராமின் குடும்ப சூழல் காரணமாக அவளிடம் சொல்லாமல் அவன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு கிளம்பி விடுகிறான். பல வருடங்கள் கழித்து பள்ளி ரீயூனியனில் ராமும் ஜானுவும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஜானுவுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். ஜானுவின் காதலை மறக்கமுடியாமல் கடைசிவரை சிங்கிளாக இருக்கிறார் ராம். 


ஒவ்வொரு சாமானியனின் வாழ்க்கையிலும் இந்த மாதிரியான ஒரு காதல் கதை இருக்கும். அப்படியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நுணுக்கமான உணர்ச்சிகளால் 96 என்கிற ஒரு காவியத்தை கொடுத்தார் பிரேம்குமார். விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா தங்கள் இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்கள். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தை ஒரு படிமேலே உயர்த்தியது . இப்படி கதை , திரைக்கதை , நடிப்பு , இசை , ஒளிப்பதிவு என ஒவ்வொரு அம்சமும் சிறப்பாக அமைந்த இப்படம் இன்று ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 


96 இரண்டாம் பாகம்


96 இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை ஏற்கனவே தான் முடித்துவிட்டதாகவும் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் கால்ஷீட் கிடைத்தால் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் இயக்குநர் பிரேம்குமார் மெய்யழகன் படத்தின் ரிலீஸின் போது தெரிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 96 இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. தனுஷின் இட்லி கடை படத்தின் தயாரிப்பு நிறுவனமான டாவ்ன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 




த்ரிஷா தற்போது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி , குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்தபடியாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 45 படத்தில் நடிக்க இருக்கிறார். 


மறுபக்கம் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ள விடுதலை 2 படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது