ரஜினிகாந்த்
கடந்த ஆண்டு ஜெயிலர் இந்த ஆண்டு வேட்டையன் என அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்கும் விதமாக பிரம்மாண்ட வெற்றிபெற்றது. ஜெயிலர் 2 படத்தின் வசூலை இந்த ஆண்டு விஜயின் தி கோட் , சூர்யாவின் கங்குவா ஆகிய இரு படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு படங்களும் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் குவிந்துள்ளது.
ரஜினி ரசிகர்கள் டிசம்பர் 12 ஆம் தேதியை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் கூலி மற்றும் அடுத்தபடியாக ரஜினி நடிக்கவிருக்கும் ஜெயிலர் 2 ஆகிய இரு படங்களின் அப்டேட்கள் ரஜினி பிறந்தநாளன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூலி அப்டேட்
கூலி படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நாகர்ஜூனா , உபேந்திரா , சத்யராஜ் , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தின் ப்ரோமோ வீடியோ முன்னதாக வெளியாகி கவனமீர்த்தது. தற்போது ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் புது லுக் ஒன்றை படக்குழு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் ரஜினிக்கு இப்படத்தில் புது லுக் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜெயிலர் 2
கூலி படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. இப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்திற்கான ப்ரோமோ படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தம் இந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினி ரசிகர்களுக்கு டபுள் தமாகா காத்திருக்கிறது.