சாதி படம் எடுத்தால் தான் தியேட்டருக்கு கூட்டம் வரும் என்பதை சாமானியன் படம் உடைத்திருக்கிறது என இயக்குநர் பிரவீன் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார். 


எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள படம் “சாமானியன்”. இந்த படத்தை ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள நிலையில் ராமராஜன்,ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்த இப்படம் மே 23 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்துக்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில்  ராம்கோபி படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். 


சாமானியன் படம் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ராமராஜன் ரீ-எண்ட்ரீ கொடுத்திருக்கிறார். அவரது வருகை நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் , இப்படம் அதனை திருப்திபடுத்தியுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் பல படங்களில் அவரை  நடிக்க கேட்டும் மறுத்து விட்டார். இப்படியான நிலையில் சாமானியன் படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. 






இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் பேசிய இயக்குநர் பிரவீன் காந்தி, “சாதி படம் எடுத்தால் தான் தியேட்டருக்கு கூட்டம் வரும் என்பதை சாமானியன் படம் உடைத்திருக்கிறது. முதல்முறையாக தயாரிப்பாளர்களுக்கு தைரியத்தை இப்படம் வரவழைத்திருக்கிறது. எல்லாரும் இன்னைக்கு கடன் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு நிற்கிறோம். கடன்படாத நாடே இல்லை. ஒரு அரசாங்கம் கடன் பிரச்சினையில் மாட்டிக்கொண்டால் இன்னொரு அரசாங்கம் காப்பாற்றும். ஆனால் தனி மனிதன் மாட்டிக்கொண்டால் நிலை அவ்வளவு தான்.ராமராஜன் சமூக பொறுப்போடு இன்றைய மக்களுக்கு தேவையான விஷயத்தை தன்னுடைய கண் மூலமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 


அவர் மாடு கன்றுகளுடன் தான் நடிப்பார் என பார்த்தால், அவரது கண்ணே நடித்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு பாராட்டுகள். இது பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் அழும் படம். கடன் பிரச்சினை எல்லாருக்கும் உள்ளது. அவர்கள் அதிலிருந்து வெளியே வருவதை அருமையாக காட்டியிருக்கிறார்கள். சினிமாவில் சாதி வேண்டாம் என்பதை நான் உறுதியாக சொல்லுவேன்.அதனால் பொறுப்புணர்வுடன் கதைகளை தேர்வு செய்ய வேண்டும். சாதியை காரணம் காட்டி பிரிவினையை உண்டாக்குபவர்கள் சமூகத்துக்கே தவறானவர்கள்” என தெரிவித்துள்ளார்.