திராவிட மாடல் அல்ல திறமற்ற மாடல்‌; திமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகளே கிடைக்காது- ஓபிஎஸ் கண்டனம்

தி.மு.க.வின்‌ மெத்தனப்‌ போக்கினைப்‌ பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான்‌.

Continues below advertisement

தமிழ்நாட்டில்‌ புதிதாக அரசு மருத்துவக்‌ கல்லூரிகளை உருவாக்காத தி.மு.க. அரசிற்குக் கடும்‌ கண்டனத்தைத் தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ‌

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில்‌ அதிக மருத்துவக்‌ கல்லூரிகள்‌ திறக்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சியில்தான்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. தமிழ்நாட்டில்‌ மொத்தமுள்ள 39 அரசு மருத்துவக்‌ கல்லூரிகளில்‌, 24 மருத்துவக்‌ கல்லூரிகள்‌ முன்னாள் முதல்வர்கள் எம்‌.ஜி.ஆர்‌., ஜெயலலிதா மற்றும் ‌ஜெயலலிதாவின் வழியில்‌ நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக ஆட்சிக்‌ காலத்தில்‌ துவங்கப்பட்டன. இதற்கு முற்றிலும்‌ எதிரான நிலை கடந்த மூன்று ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ நிலவுகிறது.

தி.மு.க.வின்‌ தோதல்‌ அறிக்கை எண்‌. 164-ல்‌, மருத்துவக்‌ கல்லூரி இல்லாத மாவட்டங்களில்‌, புதிய அரசு மருத்துவக்‌ கல்லூரிகளை தி.மு.க. அரசு உருவாக்கும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள்‌ கடந்த நிலையிலும்‌, ஒரு அரசு மருத்துவக்‌ கல்லூரியைக்‌ கூட உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால்‌, 99 விழுக்காடு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கூறுகிறார்‌.

25 ஏக்கர்‌ நிலத்தை தேடும்‌ பணியில்‌ தி.மு.க.

ஒரு மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்‌ கல்லூரி என்ற அடிப்படையில்‌, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரிகளை துவங்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்‌. மூன்று ஆண்டுகளாகியும்‌ இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இப்பொழுதுதான்‌, மேற்படி ஆறு மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரியை அமைக்க 25 ஏக்கர்‌ நிலத்தை தேடும்‌ பணியில்‌ தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

ஆட்சிக்கு வந்தவுடனேயே இதற்கான பணியை மேற்கொண்டிருந்தால்‌, தற்போது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகள்‌ உருவாகி, அதன்மூலம்‌ கிட்டத்தட்ட 900 மருத்துவ இருக்கைகள்‌ தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும்‌. இதைச்‌ செய்ய தி.மு.க. அரசு தவறிவிட்டது. இதன்மூலம்‌, 900 ஏழையெளிய மாணவ, மாணவியர்‌ மருத்துவராவது தடுக்கப்பட்டு இருக்கிறது. புதிய மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம்‌ ஒவ்வொரு ஆண்டு நவம்பர்‌ மாதம்‌ என்றிருக்கின்ற நிலையில்‌, இனி மேல்‌ நிலத்தை கண்டுபிடித்து, கையகப்படுத்தி, விண்ணப்பிப்பது என்பது இயலாத காரியம்‌.

திராவிட மாடல் அல்ல திறமற்ற மாடல்‌

தி.மு.க.வின்‌ மெத்தனப்‌ போக்கினைப்‌ பார்க்கும்போது, அடுத்த ஆண்டாவது ஆறு மருத்துவக்‌ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமா என்பது சந்தேகம்தான்‌. இந்த நிலை நீடித்தால்‌, இந்த ஐந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ ஒரு மருத்துவக்‌ கல்லூரியும்‌ தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. தி.மு.க.வின்‌ திறமையின்மைக்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஒரு வேளை திறமற்ற மாடல்‌ என்பதுதான்‌ திராவிட மாடலின்‌ பொருள்‌ போலும்‌.

ஏழையெளிய மாணவ, மாணவியர்‌ அதிகளவில்‌ மருத்துவராக வேண்டுமானால்‌, அதற்கு ஒரே வழி அதிக அளவில்‌ அரசு மருத்துவக்‌ கல்லூரிகள்‌ துவக்கப்பட வேண்டும்‌.

இதனை முதலமைச்சர்‌ அவர்கள்‌ மனதில்‌ நிலைநிறுத்தி, பெரம்பலூர்‌, மயிலாடுதுறை, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ புதிய மருத்துவக்‌ கல்லூரிகளை திறக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக தொண்டர்கள்‌ உரிமை மீட்புக்‌ குழுவின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌’’.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola