உயர் கல்வித்துறையில் 49 சதவீத மாணவர் சேர்க்கையுடன் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளது.  முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்விக் கட்டணத்துக்கான ரூ.1000 கோடி ஆண்டுதோறும் செலவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளைஞர்களுக்கு தொழில்‌ சார்ந்த திறன்களை வழங்கிடும்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌, மாணவிகள்‌ உயர்கல்வியினை தொய்வின்றித்‌ தொடர மாதந்தோறும்‌ 1000 ரூபாய்‌ வழங்கிடும்‌ புதுமைப்பெண்‌ திட்டம், மாணவர்களுக்கான தொழில்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி மானியத்‌ திட்டம்‌, முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்‌ தொகை திட்டம்‌, மாணவர்களின்‌ கல்வித்‌ தேவையை நிறைவு செய்யும்‌ உங்களைத்‌ தேடு உயர்கல்வி உள்ளிட்ட பல திட்டங்களால்‌ தமிழகத்தில்‌ உயர்கல்வித்‌ தரத்திலும்‌, அடிப்படை கட்டமைப்பு வசதிகளும்‌ மேம்படுத்தப்பட்டு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகவும்‌ முன்னணி மாநிலமாகவும்‌ திகழ்ந்து வருகிறது.


உயர்கல்வி சேர்க்கையில்‌ இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்‌


மாணவர்‌ சேர்க்கையில்‌ இட ஒதுக்கீடு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவசக்‌ கல்வி, பட்டியலின மாணவர்களுக்கும்‌இலவசக்‌ கல்வி, பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல திட்டங்களையும்‌, அடிப்படைக்‌ கட்டமைப்பு வசதிகளையும்‌ தொடர்ந்து உருவாக்கியதன்‌ பயனாக இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப்‌ பல்கலைக்கழகங்களும்‌ 5000க்கும்‌ மேற்பட்ட தரம்‌ வாய்ந்த


பொறியியல்‌ கல்லூரிகளும்‌, அதிக அளவிலான மருத்துவக்‌ கல்லுரிகளும்‌, புகழ்பெற்ற 1000 உயர்கல்வி நிறுவனங்களில்‌ 31 உயர்கல்வி நிறுவனங்களும்‌ தமிழ்நாட்டில்‌ அமையப்பெற்று தரமான கல்வியினை மாணவர்களுக்கு வழங்கி தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத்‌ திகழ்கிறது.


அகில இந்திய உயர்கல்வி ஆய்வு நிறுவனத்தின்‌ கூற்றுப்படி உயர்கல்வி மாணவர்‌ சேர்க்கையில்‌ 49% பெற்று இந்திய அளவில்‌ தமிழ்நாடு முதலிடம்‌ பெற்றுள்ளது. இது அகில இந்திய சராசரி சதவிதத்தைக்‌ காட்டிலும்‌ இரண்டு மடங்கு அதிகம்‌ என்பது குறிப்பிடத்தக்கதாகும்‌.


தமிழ்நாடு முதலமைச்சரின்‌ தொலைநோக்குப்‌ பார்வையில்‌ உதித்த நான்‌ முதல்வன்‌ திட்டம்‌, புதுமைப்பெண்‌ திட்டம்‌ உள்ளிட்ட பல திட்டங்களினால்‌ உயர் கல்வியில்‌ குறிப்பாக மாணவிகளின்‌ சேர்க்கையும்‌ அதிகரித்துள்ளது.


இடைநிற்றல்‌ இன்றி மாணவிகள்‌ தொடர்ந்து உயர்கல்வி பயின்றிட மாதந்தோறும்‌ ரூ.1000 வழங்கிடும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டம்,‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ 6-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரை பயின்று இடைநிற்றல்‌ இன்றி உயர்கல்வி பயிலும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ மாதந்தோறும்‌ 1,000 ரூபாய்‌ வழங்கும்‌ மூவலூர்‌ இராமாமிர்தம்‌ அம்மையார்‌ நினைவு உயர்கல்வி உறுதித்‌ திட்டம்‌ எனும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌ 6.9.2022 அன்று முதலமைச்சரால்‌ தொடங்கிவைக்கப்பட்டு, 2 இலட்சத்து 73 ஆயிரம்‌ மாணவிகளுக்கு மாதம்‌ 1,000 ரூபாய்‌ வங்கிக் கணக்கில்‌ வரவு வைக்கப்பட்டு பயனடைகின்றனர்‌. இந்தியாவிற்கே வழிகாட்டிடும்‌ இந்த புதுமைப்‌ பெண்‌ திட்டத்தினால்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பயின்று கல்லூரிகளில்‌ சேரும்‌ மாணவியர்களின்‌ எண்ணிக்கை 34 சதவீதம்‌ அதிகரித்துள்ளது.


நான்‌ முதல்வன்‌


இளைஞர்களுக்கு தொழில்‌ சார்ந்த திறன்களை வழங்கிடும்‌ உன்னத திட்டமே நான்‌ முதல்வன்‌ திட்டம்‌. இந்த திட்டத்தின்‌ வாயிலாக இதுவரையில்‌ 27 இலட்சம்‌ மாணவர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌. இத்திட்டத்தினால்‌ பயிற்சி பெற்ற 1 இலட்சத்து 84 ஆயிரம்‌ இளைஞர்களில்‌ 1 இலட்சத்து 19 ஆயிரம்‌ பேர்‌ வேலைவாய்ப்புப்‌பெற்று மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது இத்திட்டத்திற்கான மாபெரும்‌ வெற்றியாகும்‌.


ரூ.3,014 கோடியில்‌ உயர்‌ சிறப்பு மையங்களாகும்‌ உயர்‌ கல்வி நிறுவனங்கள்‌


உயர்கல்வி நிறுவனங்களை உயர்சிறப்பு மையங்களாகத்‌ தரம்‌ உயர்த்துவதில்‌ அரசு கவனம்‌ செலுத்தி வருகிறது. தொழில்‌ துறைக்குத்‌ தேவையான திறன்மிகு பணியாளர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நவீன அறிவியல்‌ ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதன்‌ மூலம்‌ பல்வேறு துறைகளின்‌ முன்னேற்றத்திற்கும்‌ இது வழிவகுக்கிறது. தொழில்துறை அமைப்புகளுடன்‌ இணைந்த 4.0 தரநிலையை எய்திடும்‌ பொருட்டு 3,014 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 45 அரசு தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ பாடத்திட்டங்கள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை மேம்படுத்தும்‌ முன்னோடித்‌ திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.


தொழில்‌ கல்லூரிகளில்‌ 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில்‌ சேர்ந்துள்ள மாணவர்களுக்கு கல்விக்‌ கட்டணம்‌, விடுதி கட்டணம்‌ மற்றும்‌ போக்குவரத்து கட்டணத்திற்காக 213.37 கோடி ரூபாய்‌ 7.5 சதவிகித சிறப்பு உள்‌ இடஒதுக்கீட்டின்‌ கீழ்‌ கடந்த மூன்றாண்டுகளில்‌ 28,601 அரசுப்‌ பள்ளியில்‌ பயின்ற மாணாக்கர்கள்‌ பொறியியல்‌ கல்லூரிகளில்‌ சேர்க்கை பெற்றுள்ளனர்‌. இம்மாணாக்கர்களுக்கான கல்விக்கட்டணம்‌, விடுதிக்‌ கட்டணம்‌, போக்குவரத்துக்‌ கட்டணம்‌ போன்றவற்றிற்காக 213.37 கோடி ரூபாய்‌ நிதி உதவி வழங்கப்பட்டு மாணவர்கள்‌ கல்வி தொடர வழிவகை செய்துள்ளது.


முதல்‌ தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக்‌ கட்டணச்‌ சலுகைக்காக ரூ.1,000 கோடி


மாநிலத்திலுள்ள அனைத்துப்‌ பொறியியல்‌ கல்லூரிகளிலும்‌ ஒற்றைச்‌ சாளர கலந்தாய்வு மூலம்‌ நேரடி சேர்க்கை பெற்றுள்ள முதல்‌ தலைமுறை பட்டதாரி மாணாக்கர்கள்‌ தொடர்ந்து உயர்கல்வியினைத்‌ தொடர ஆண்டுதோறும்‌ கல்விக்‌ கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌ கடந்த 3 ஆண்டுகளில்‌ 4 இலட்சத்து 13 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு கல்விக்‌ கட்டண சலுகையாக ரூ.1,000/- கோடி வழங்கப்பட்டுள்ளது.


ஆண்டுதோறும்‌ 10,000 மாணவர்களுக்குத்‌ தொழில்‌ திறன்‌ மேம்பாடு


அரசு பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ அரசு பலவகைத்‌ தொழில்நுட்பக்‌கல்லூரிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ தொழில்நுட்பத்‌ திறனை மேம்படுத்திடும்‌ வகையில்‌, ஒவ்வாரு ஆண்டும்‌ 10,000 மாணாக்கர்கள்‌ தேர்வு‌ செய்யப்பட்டு தொடர்ந்து 25 நாட்களுக்குத்‌ தொழிலக உட்பயிற்சி வழங்கிடும்‌ பொருட்டு, தலா ஒரு மாணாக்கருக்கு ரூ.16,600/- வீதம்‌ உதவித்‌ தொகை வழங்கப்படுகிறது. தொழிலக உட்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும்‌ மாணவர்களுக்கு அந்த நிறுவனத்திலேயே அவர்கள்‌ வேலை பெறும்‌ வாய்ப்பினையும்‌ பெறுகிறார்கள்‌.


பிற மொழிகளை கற்பதில்‌ ஆர்வமுள்ள மாணக்கர்களில்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ போதுமான கல்வியினைப்‌ பெற்றிடும்‌ வகையில்‌, தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல்‌ கல்லூரிகளில்‌ இறுதியாண்டு பயிலும்‌ மாணக்கர்களுக்கு ஜெர்மன்‌, பிரெஞ்சு மற்றும்‌ ஜப்பானிய மொழிகள்‌ கற்றுத்‌ தரப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளில்‌1,200 மாணாக்கர்கள்‌ பயனடைந்துள்ளனர்‌.


முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி மானியத்‌ திட்டம்‌


தமிழ்நாட்டில்‌ உலகத்தரம்‌ வாய்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும்‌, ஆராய்ச்சி மாணவர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ இளநிலை மற்றும்‌ முதுநிலை பயிலும் மாணாக்கர்களை ஆராய்ச்சி செய்ய ஊக்கப்படுத்தும்‌ திட்டமே ஆராய்ச்சி மானியத்‌ திட்டமாகும்‌.


கடந்த 2023-2024 கல்வியாண்டில்‌ தொடங்கப்பட்ட இத்திட்டத்தின்‌ வாயிலாக ஆண்டுதோறும்‌ 50 கோடி ரூபாய்‌ உயர்கல்வி நிறுவனங்களுக்கும்‌ பல்கலைக்கழகங்களுக்கும்‌ மானியமாக வழங்கப்படு கிறது. இதன்‌ பயனாக, மாணவர்களிடம்‌ ஒளிந்துள்ள புதுமையான தொழில்நுட்பங்கள்‌, தயாரிப்புகள்‌, வணிக மாதிரிகள்‌ மற்றும்‌ புதிய தொழில்நுட்ப தயாரிப்பு முறைகளை ஊக்குவிக்கவும்‌, தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை தயாரித்து வழங்கிடவும்‌ வழிவகை செய்யப்பட்டு, நாளது வரையில்‌ 1,960 ஆராய்ச்சி கருத்துக்கள்‌ பெறப்பட்டுள்ளன.


ரூ.1,000 கோடியில்‌ காமராஜர்‌ கல்லூரி மேம்பாட்டுத்‌ திட்டம்‌


பெருந்தலைவர்‌ காமராஜர்‌ கல்லூரி மேம்பாட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ அரசு பொறியியல்‌ கல்லூரிகள்‌, அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகள்‌ மற்றும்‌ அரசு பலவகை தொழில்நுட்பக்‌ கல்லூரிகளில்‌ உட்கட்டமைப்பு வசதிகளை 5 ஆண்டுகளில்‌ மேம்படுத்திட ரூ.1000 கோடிக்கு நிருவாக அனுமதி வழங்கப்பட்டு முதற்கட்டமாக, 2022-23-ஆம்‌ ஆண்டிற்கு ரூ 250 கோடியும்‌. 2023-24ஆம்‌ ஆண்டிற்கு ரூ.200 கோடியும்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கல்லூரிகளுக்குத்‌ தேவையான கூடுதல்‌ கட்டடங்கள்‌, புதிய கல்லூரிகளை கட்டுதல்‌, ஆய்வகங்களை ஏற்படுத்துதல்‌ உள்ளிட்ட பல பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.


ரூ.150 கோடி செலவில்‌ உயர்கல்வி நிறுவனங்களில்‌ மஜிட்டல்‌ மாற்றம்‌


உயர்‌ கல்வித்‌ துறையில்‌ நிறுவன வள திட்டமிடல்‌ மற்றும்‌ மென்பொருளுடன்‌ கூடிய ஒருங்கிணைந்த கற்றல்‌ மேலாண்மை அமைப்பினை ரூ.150 கோடி செலவில்‌ உருவாக்கி, 14 அரசுப்‌ பல்கலைக்கழகங்கள்‌, கல்லூரிக்‌ கல்வி இயக்குநரகம்‌ மற்றும்‌ தொழில்நுட்பக்‌ கல்வி இயக்குநாகம்‌ ஆகியவற்றில்‌ டிஜிட்டல்‌மாற்றத்தினை வழங்கிடவும்‌ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


1,250 கெளரவ விரிவுரையாளர்கள்‌ நியமனம்‌


அரசுக்‌ கல்லூரிகளில்‌ காலியாக உள்ள உதவி பேராசிரியர்‌ பணியிடங்களைநிரந்தரப்‌ பேராசிரியர்களைக்‌ கொண்டு நிரப்பிடும்‌ வரை மாணவர்களின்‌ கல்வி பாதிக்காவண்ணம்‌ தொகுப்பூதிய அடிப்படையில்‌ 1,750-க்கும்‌ மேற்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.


முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்‌ தொகை திட்டம்‌ (Chief Minister Research Fellowship)


தமிழ்நாட்டு மாணவர்களின்‌ ஆராய்ச்சித்‌ திறனை மேம்படுத்தவும்‌, புதிய கண்டுபிடிப்புகளைத்‌ தமிழ்நாட்டில்‌ ஊக்கப்படுத்தவும்‌ "முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம்‌ முதலமைச்சரால்‌ 2023-ஆம்‌ ஆண்டில்‌ அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்தத்‌ திட்டத்தில்‌ தேர்ந்தெடுக்கப்படும்‌ 120 மாணவர்களுக்கு மாதம்‌ ரூ.25,000/- வீதம்‌ மூன்று ஆண்டுகளுக்கு ஊக்கத்‌ தொகை வழங்கப்படுகிறது.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.