லவ் டுடே படத்தில் இடம் பெற்ற காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்பதை அப்படத்தின் நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் வெளியானது. 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீணா ரவி, ஆஜித் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் வசூலில் ரூ.50 கோடியை கடந்து கோலிவுட் திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
இப்படம் இதுவரை ஓடிடியில் வெளியாகாத நிலையில் சில தினங்களுக்கு முன்பு படத்தின் ஹெச்டி பிரிண்ட் வெளியாகி ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேசமயம் பிரதீப் தன்னுடைய கல்லூரி காலத்தில் சமூக வலைத்தளங்களில் போட்ட பதிவையெல்லாம் மீண்டும் எடுத்து இணையவாசிகள் வெளியிட்டதால் கடும் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து தான் பேஸ்புக்கில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதைத் திருத்த முயற்சித்தேன்.ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தில் ஆஜித் மற்றும் இவனா இருவரும் விஜய் நடித்த மதுர படத்தில் இடம் பெற்ற ‘இலந்தபழம்’ பாடலுக்கு ரீல்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த காட்சி எப்படி படமாக்கப்பட்டது என்ற வீடியோவை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதெல்லாமே உங்க விளையாட்டு தானா என்றும், நீங்க கண்டிப்பா ஒருநாள் பெரிய ஆளா வருவீங்க பிரதீப் என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.