முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமிப்பதில் அவ்வளவு அவசரம் எங்கிருந்து வந்தது என மத்திய அரசை நோக்கி உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் பரபரப்பு கருத்துகளை தெரிவித்திருந்தது.
குறிப்பாக, குறுகிய கால பதவி காலத்துடன் தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிப்பதில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்து. 2004ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த அரசுகள், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை அழித்துவிட்டதாக குற்றச்சாட்டு சுமத்தி இருந்தது.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் சீர்திருத்தங்களை கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், நேற்று போலவே இன்றைய விசாரணையின்போதும், இரு தரப்பு வாதங்களிலும் அனல் பறந்தன.
விருப்பு ஓய்வு பெற்ற அடுத்த நாளே, தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம் செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பான விரிவான வழக்கில் கோயல் நியமனம் குறித்து விசாரிக்க மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இன்றைய விசாரணையில், "பரிந்துரைக்கப்பட்ட நான்கு பெயர்கள் கொண்ட பட்டியலில் இருந்து சட்டத்துறை தேர்வு செய்துள்ளது. நவம்பர் 18ஆம் தேதி, கோயல் நியமனம் தொடர்பான ஆவணம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநாளில், அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கூட அதே நாளில் பரிந்துரை செய்துள்ளார். மோத விரும்பவில்லை ஆனால், இது அவசர அவசரமாக நடந்துள்ளது. அப்படிப்பட்ட அவசரம் எங்கிருந்து வந்தது?
தேர்தல் ஆணையர் பதவி மே 15ஆம் தேதி காலியானது. மே முதல் நவம்பர் வரையில் நேரம் இருந்தபோது, நியமனத்தை மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவசரம் அரசுக்கு எங்கிருந்து வந்தது? நியமனம் தொடர்பான நடைமுறை ஒரே நாளில் தொடங்கி அதே நாளில் முடிந்துள்ளது. 24 மணி நேரம் கூட ஆகவில்லை. எந்த மாதிரியான மதிப்பாய்வு நடந்துள்ளது" என்றார்.
நான்கு பெயர்கள் எப்படி பரிந்துரைக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "எங்களுக்கு புரியவில்லை. அனைத்திற்கும் ஆமாம் போடும் நான்கு பெயரை கவனமாக தேர்ந்தெடுத்திருந்தால், தேர்வு நடைமுறை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்" என தெரிவித்தது.
அருண் கோயல், தேர்தல் ஆணையராக நவம்பர் 21ஆம் தேதி பொறுப்பேற்றதாக தேர்தல் ஆணையத்தில் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் கேடரைச் சேர்ந்த 1985ஆம் ஆண்டு தேர்வான ஐஏஎஸ் அதிகாரியான இவர், 37 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, மத்திய கனரக தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றார்.
அடுத்தாண்டு, பிப்ரவரி 2025இல் தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாரின் பதவிகாலம் முடிவடைகிறது. அவருக்கு பிறகு, கோயல் தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார். தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, புதிய தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பி உள்ளது.