காடுவெட்டி படத்துக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும் என இயக்குநர் பேரரசு பட நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள காடுவெட்டி படத்தில் மறைந்த தலைவர் காடுவெட்டி குருவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். 


இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “தளபதி விஜய், ரஜினிக்கு வருவதெல்லாம் ரசிகர் கூட்டமாக இருக்கும். ஆனால் காடுவெட்டிக்கு வரும் கூட்டம் உணர்வு பூர்வமானதாக இருக்கும். நடிகர் பிரஷாந்தின் அப்பாவான தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய ஹீரோவாக மாறினார். அதேபோல் நடிகர் நெப்போலியன் ஆரம்ப காலக்கட்டத்தில் வில்லனாக நடித்திருந்தார். சீவலப்பேரி பாண்டி படத்தில் நடித்த பிறகு மிகப்பெரிய ஹீரோவானார்.


அதேமாதிரி தான் காடுவெட்டியில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் மிகப்பெரிய ஹீரோவாக வருவார். இந்த மாதிரி ஆட்கள் வரும்போது தான் உணர்வுப்பூர்வமான கதைகள் வரும். வியாபாரத்துக்காக படம் எடுத்தால் வெட்டு, துப்பாக்கி என்று தான் செல்லும். ஆனால் இந்த மாதிரி உணர்வுப்பூர்வமாக கதைகளை யார் எடுப்பார்கள். இந்த படம் வெற்றிப் பெற வேண்டும். அப்போது தான் தமிழ் திரையுலகம் நன்றாக இருக்கும். 


நான் படம் பார்க்கவில்லை. ட்ரெய்லரையும், பாடல்களையும் பார்க்கும்போது யூகிக்க முடிகிறது. காடுவெட்டி படத்தில் கூட வரும் ஒரு பாடலில் நீ டம்மி பீசுடி என்ற வரி வரும். இங்கு நிறைய பேரு டம்மி இருப்பதால் தான் சிலர் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நிறைய காதல் படங்கள் தமிழ் திரையுலகில் வந்திருக்கிறது. ஆனால் காடுவெட்டி ட்ரெய்லரை பார்த்தவுடன் இது வேற மாதிரி காதல் கதை என புரிந்து விட்டது. இதனை காதல் விழிப்புணர்வு படம் என சொல்லலாம். இப்படம் பெற்றவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாகும். சிலருக்கு இந்த காலக்கட்டத்தில் எல்லாம் காதல் வேற மாதிரி இருக்கும். 


சாதி பார்த்து காதலித்தால் அது புனிதம் இல்லை. சாதி,மதம், பொருளாதாரம் என எதையும் பார்த்து காதலிக்கக்கூடாது. அதில் அன்பு மட்டுமே இருக்க வேண்டும். காதலித்து ஏமாற்றுவது ரொம்ப தப்பு. அதற்கு விழிப்புணர்வு தரும் படமாக காடுவெட்டி படம்  இருக்கும். இப்படம் தமிழ்நாடு முழுவதும் பெரும் வெற்றி பெறும். இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக பெண், பெண் உரிமைகளை மீட்டு விட்டோம் என சொல்வதெல்லாம் பொய். தமிழ் திரையுலகில்,திரைப்படங்களில் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். 


தமிழ் பட நடிகைகளை கொச்சைப்படுத்துகிறார்கள். இங்கு ஒரு பெண்ணுக்கு அவமானம் என்றால் முதலில் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மக்களால் தேர்வு செய்த பிரதிநிதிகளை கேள்வி கேட்காமல் நடிகைகள் பற்றி சொன்னால் அதில் தான் கவனம் செலுத்தும் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?. மக்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்க வேண்டும். எந்த பெண்ணாக இருந்தாலும் பாதுகாப்பு வேண்டும்” என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.