தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பேரரசு. கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லி என பெயரெடுத்த பேரரசு 2005ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திருப்பாச்சி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. கில்லி படத்திற்கு பிறகு விஜய்க்கு மற்றுமொரு வெற்றி என்றால் அது திருப்பாச்சி படம் என்றுதான் சொல்லவேண்டும்.முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பேரரசு இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்களில் சென்டிமென்ட் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் திருப்பாச்சியில் அண்ணன் - தங்கை பாசத்துடன் சேர்த்து ஆக்ஷனிலும் கலக்கியிருப்பார்.
திருப்பாச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து உடனடியாக அதே ஆண்டு விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து சிவகாசி என்ற படத்தை இயக்கினார். தான் இயக்கும் படங்களுக்கு தமிழ் நாட்டில் புகழ் பெற்ற ஊர்களின் பெயர்களை டைட்டிலாக வைப்பதில் இயக்குனர் பேரரசு ரொம்பவே ஸ்பெஷலிஸ்ட். அந்த வகையில் பேரரசு இதுவரை இயக்கிய அனைத்து படங்களும் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை டைட்டிலாக வைத்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் இருக்கும் பேரரசு தான் இயக்கும் படங்கள் அனைத்திற்கும் தானே பாடல்களை எழுதியும் வருகிறார்.
விஜயுடன் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த பேரரசு அதைத் தொடர்ந்து இயக்கிய திரைப்படம் திருப்பதி. அஜித் ஹீரோவாக நடித்த இந்த படத்திலும் அனைத்து பாடல்களையும் பேரரசு எழுதியிருந்தார். முந்தைய படங்களை விடவும் அஜித் இந்த படத்தில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் உடல் எடையை குறைத்தும் நடித்து பட்டைய கிளப்பி இருப்பார். இந்த படத்தின் பூஜைக்கு விஜய் வந்திருந்தது அந்த நேரத்தில் மிகப்பெரிய செய்தியாக இருந்தது. அதுகுறித்து ஒரு பேட்டியில் பேரரசு பேசியது வைரலாகி உள்ளது.
அஜித்தின் உழைப்பு பற்றி பேசிய அவர் ஒரு முக்கியமான சம்பவத்தை குறிப்பிட்டார், "ஷாலினி கால் பண்ணி, இன்னைக்கு ஷூட்டிங்க்கு அஜித் ஒரு அரை மணி நேரம் லேட்டா வருவாரு, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்கன்னு சொல்றாங்க, ஏன் என்ன விஷயம்னு கேட்டா, நைட் முதுகுல ஒரு ஆபரேஷன், நைட்டெல்லாம் தூங்கல, காலைல ஒரே ஒரு இன்ஜெக்ஷன் போடணும் அதை மட்டும் போட்டுட்டு வந்துடுவாருன்னு சொல்றாங்க, எனக்கு ஷாக், ஏன் மேடம் ரெஸ்ட் எடுக்க சொல்லலாமே இன்னைக்கு நாங்க அவரு இல்லாத ஷாட் எடுத்துக்குவோமேன்னு கேட்டேன், இல்ல நீங்க ஷூட்டிங் நடத்துங்க, இந்த விஷயத்தை நான் உங்க கிட்ட சொன்னேன்னு அவர்கிட்ட சொல்ல வேண்டாம், கோவப்படுவாருன்னு சொல்றாங்க. நானும் யார்கிட்டையும் சொல்லல, அவரு வரும்போது பாக்குறேன், நைட்டெல்லாம் தூங்காத எந்த அசதியும் வெளிய காட்டாம, ரொம்ப புத்துணர்ச்சியா எப்போதும் வந்து ஷாட் என்னன்னு கேக்குற மாதிரி வந்து கேக்குறாரு. எனக்கு தெரியும் ஆபரேஷன் நடந்திருக்குன்னு, ஆனா கொஞ்சம் கூட அதை வெளில காட்டிக்கவே இல்ல. அவரு நெனச்சா ஷூட்டிங்கு வரமுடிலன்னு சொல்லிட்டு ஒரு நாளோ ரெண்டு நாளோ ரெஸ்ட் எடுக்கலாம், ஆனா அவருடைய தன்னம்பிக்கை, அவரு ஷூட்டிங் கெடாம போகணும்ன்னு எதிர்பாக்கிறார்." என்று கூறினார்.
விஜயையும் அஜித்தையும் இணைத்து வெளியான அந்த பூஜை புகைப்படம் மிகப் பெரிய வைரல், அது பிளான் செய்ததா, தற்செயலாக நடந்ததான்னு கேட்டதற்கு பதிலளித்த அவர், "திருப்பாச்சி, சிவகாசின்னு ரெண்டு படம் விஜய்க்கு பண்றோம், அப்புறம் அடுத்த படம் அஜித்துக்கு திருப்பதி. நான் விஜய்க்கு எடுத்த ரெண்டு படமுமே பூஜை போடல, சும்மா சாமிய கும்பிட்டுட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சிடுவோம். ஒரு விழாவா பண்ணல. ஆனா திருப்பதி பண்ணும்போது பெரிய விழாவா பண்ற ஐடியா, அதுல எனக்கு விஜய் கலந்துக்கணும்ன்னு ரொம்ப ஆசை. அதனால அவரை கூப்பிட்டேன் உடனே வர்றேன்னு சொல்லிட்டாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம், அதை தயாரிப்பாளர் கிட்ட சொன்னா நம்பல, என் அசிஸ்டண்ட்கள் கிட்ட சொன்னா அவங்களும், எப்படி சார் இவரு படத்துக்கு அவர் வருவாரு, சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லிருப்பாருன்னு சொல்றாங்க. இவங்களாம் பேச பேச எனக்கும் நம்பிக்கை போயிடுச்சு. பூஜைக்கு முதல் நாள் நைட் கால் வருது, எத்தன மணிக்கு பூஜைன்னு கேட்டார், எனக்கு ரொம்ப சந்தோஷம், எட்டரை மணிக்கு பூஜை சார், நீங்க கொஞ்சம் முன்ன பின்ன கூட வாங்க பிரச்னை இல்லைன்னு சொல்லிட்டு வச்சுட்டேன்.
எனக்கு இப்போ உறுதியா தெரியும் வந்திடுவாருன்னு, ஆனா அவங்க யார்கிட்டயும் நான் சொல்லிக்கல, சொன்னா மறுபடி ஏதாவது பேசி குழப்பி விட்டுடுவங்கன்னு விட்டுட்டேன். அதே மாதிரி ஷார்ப்பா வந்துட்டார். பிரெஸ், கேமராவெல்லாம் வேற பக்கம் திரும்புது. அஜித் சார் பாக்கெட்ல கைய விட்டுட்டு நிக்குறார், அவர் உண்மையாவே வந்துட்டாரான்னு ஆச்சர்யத்துல பாக்குறார். விஜய் வந்து அஜித்துக்கு கைய கொடுக்குறார். அஜித் சார் கொடுக்கமா ரெண்டு நிமிஷம் யோசிக்குறார். அப்புறம் கைய கொடுத்துட்டு, ஜாலியா பேசி இருந்துட்டு போனார். " என்றார்.