முதன் முதலில் எனக்கு இயக்குநராக வாய்ப்பு கொடுத்த விஜய் நான் என்ன சாதிக்காரன் என்று கேட்கவில்லை. என் சட்டையை கழட்டி நான் சிலுவை போட்டு இருக்கிறேனா என்று பார்க்கவில்லை என இயக்குனர் பேரரசு ஆதங்கத்துடன் பேசியுள்ளார். 


மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மாமன்னன் திரைப்படம் ஆதிக்க சாதியின் அடக்குமுறையையும், அரசியலையும் கூறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. திரைத்துறை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் பல்வேறு விதமான கருத்துகளை கூறி வரும் நிலையில், சினிமாவில் சாதி குறித்து பேசுவதை இயக்குநர் பேரரசு கடுமையாக விமர்சித்துள்ளார். 


கரண், வடிவேலு, நடித்த 'காத்தவராயன்', கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலங்கை துரை, அடுத்ததாக உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட ‘கடத்தல்’ என்ற படத்தை எடுத்துள்ளார். இதில் ஹீரோவாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகும் நிலையில், ஹீரோயின்களாக விதிஷா, ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 


அதில் பேசிய இயக்குனர் பேரரசு, ‘சினிமாவில் தாழ்த்தப்பட்டவன், உயர்ந்தவன் என யாரும் இல்லை.  இசையில் உலகமே போற்றப்படுபவர், இசைஞானி என்று புகழப்படுபவரான இளையராஜாவின் காலில் உயர்ந்த சாதியை சேர்ந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் விழவில்லையா? படத்தில் வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குனரிடம் ”நீ என்ன சாதி என கேட்கும் இயக்குனர்” மனித சாதியே இல்லை என்றார். தனக்கு முதன் முதலில் பட வாய்ப்பு கொடுத்து தன்னை இயக்குனராக மாற்றிய விஜய், தன்னிடம் கதையை மட்டும் தான் கேட்டாரே தவிர தனது சாதி மற்றும் மதத்தை கேட்கவில்லை’ என்றார்.  


மேலும், ‘ஒவ்வொரு சாதிக்காகவும் தேவர் மகன், கவுண்டர் மகன் என்று படம் எடுத்தால் சினிமா நாசமாக போகும். சினிமாவில் சாதி பெருமையை பற்றி பேசுவது தவறு இல்லை. ஆனால், இன்னொரு சாதியை சிறுமைப்படுத்த கூடாது” என்றார். 


அடுத்த நொடியே சாதி சார்ந்த படங்களை தான் வரவேற்பதாக கூறிய அவர், சாதி சார்ந்த படத்தை எடுத்தால் தான் அதன் பின்னணி மற்றும் பெருமையை தெரிந்து கொள்ள முடியும் என கூறி உதாரணத்திற்கு குறத்தி மகன் படத்தை சுட்டிக்காட்டினார்.


தொடர்ந்து பேசிய அவர், ”தேவர்மகனை பார்த்தால் தேவர்களுக்கு தான் உண்மையில் கோபம் வரவேண்டும். ஏனெனில் அந்த படத்தில் தேவர்களை கமல்ஹாசன் காட்டுமிராண்டு கூட்டம் என திட்டுவார். அதில் நடித்த சிவாஜி சார் கூட அதுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. தேவர்மகன் படத்தை தேவர்கள் படமாக பார்த்தனர். கமல்ஹாசன் மீதோ, தேவர்கள் மீதோ கோபப்படவில்லை” என்றார். 


எந்த சாதியை வைத்து படம் எடுத்தாலும் தவறு இல்லை. ஆனால், சாதியை சுட்டிகாட்டி ஒரு பிரிவினருக்கு வலி தர கூடாது என்ற பேரரசு, 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை இப்போது படமாக எடுத்து, அணைய போகும் நெருப்பை மேலும் தூண்டி விட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இறுதியாக சினிமாவில் சாதியை கலக்க வேண்டாம் என்றும், சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றார்.