விஜய் , சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தின் புதுப்பிக்கப்பட்ட டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு விஜய் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்

Continues below advertisement

விஜய் பற்றி இயக்குநர் பேரரசு 

"சூர்யா- விஜய் இருவரும் முதலில் 'நேருக்கு நேர்' படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள்.‌ இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.‌ விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்', சூர்யா நடித்த 'நந்தா' என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் 'ப்ரண்ட்ஸ்' படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும். 

என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம்.‌ ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம்.‌ 'ப்ரண்ட்ஸ்' படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள். இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.  மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.   இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது. 

Continues below advertisement

திருப்பாச்சி பட ஆடு வெட்டும் காட்சி

நான் 'திருப்பாச்சி' படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார்.‌ அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் 'ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்' என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய 'திருப்பாச்சி', 'சிவகாசி' ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.  

ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் 'பிதாமகன்' படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார். 

தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த 'ப்ரண்ட்ஸ்' படத்திற்கு இருக்கிறது.  தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த 'ப்ரண்ட்ஸ்' படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.