இலவசம் என்ற ஒன்று எங்களுக்கு தேவையில்லை என்றும், 1000 ரூபாய் பெண்களுக்கு வேண்டாம், பேருந்தில் ஓசி வேண்டாம் என்றும் இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்
எதிர்கட்சியாக இருக்கும்போது மதுவுக்கு எதிரான குரல் இருக்கிறது, ஆளுங்கட்சி ஆன பின் அந்த குரலையே காணோம், யார் குரல்வளையை நெறிக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் இயக்குநர் பேரரசு திமுகவை சாடியுள்ளார்.
வீரப்பன் மகள் அறிமுகம்
வீரப்பன் மகள் விஜயலட்சுமி - நடிகர் ராதாரவி முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் 'மாவீரன் பிள்ளை'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தப் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, இயக்குநர் பேரரசு, நடிகர் கூல் சுரேஷ், அனைத்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராஜேஷ்வரி ஆகியோர் கொண்டனர்.
அப்போது நடிகை விஜயலட்சுமி மேடையில் பேசியதாவது, "சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. 8ஆவது படிக்கும் போது வந்த வாய்ப்பு தவறவிட்டேன். வீரப்பன் எந்த ஒரு கெட்டப்பழக்கமும் இல்லாமல் மிகச்சிறந்த மனிதனாக இருந்து விட்டு போய் உள்ளார். சர்ச்சுக்கு போகும் இடத்தில் கூட பெண்களுக்கு பாலியல் வன்புணர்வு ஏற்படும் போது, அது மாதிரியான விழிப்புணர்வு படத்தில் நடிப்பதில் பெருமை கொள்கிறேன். தெருத்தெருவுக்கு டாஸ்மாக் கடை இருக்கு. குறைக்கிறேன் என்று கூறி அதுக்காக எந்த அடியும் எந்த அரசாங்கமும் எடுத்து வைக்கவில்லை. வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” எனப் பேசினார்.
பேரரசு பேச்சு
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, “வீரப்பன் மகள் விஜயலட்சுமி நல்ல பேச்சாளராகவும் இருக்கிறார். பெண்கள் இவ்வாறு பேச வேண்டும். பெண்கள் குரல் ஒலிக்க வேண்டிய காலகட்டம் இது. பெண் விடுதலை பேச்சாகவே போய் கொண்டிருக்கிறது. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. சமுதாய பொறுப்புடன் இந்த படத்தை இயக்குநர் எடுத்துள்ளார். வாழ்த்துகள்.
திரைப்படம் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். இவர்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. சினிமா தாய் அனைவரையும் அரவணைக்கும். வீரப்பன் மகள் நடிக்கலாம். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வோம். எங்களை பொறுத்தவரை அவர் ஒரு புதுமுக நடிகை. இது கலைத்துறை.
தெருக்கூத்து என்றிருந்தது. அது அழிந்து கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. எங்கள் விஜய், பிரபு தேவா ஆடுவதை விட குடிமகன்கள் ஆடும் ஆட்டம்அதிகம். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்துகிறார்கள். இதற்கு யார் காரணம்?
திமுகவை சாடிய பேரரசு
முன்பெல்லாம் தேர்தல் வரும் நேரத்தில் மதுவை ஒழிப்போம் என கூறி ஓட்டு கேட்பார்கள். ஆனால் இப்போது மது கொடுத்துவிட்டு தான் ஓட்டு கேட்கிறார்கள். மதுவை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்போம் என்கிறார்கள். மக்கள் தவறா, அரசாங்கம் தவறா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு உள்ளது.
எதிர்கட்சியாக இருக்கும் போது மதுவுக்கு எதிரான குரல் இருக்கிறது. ஆளுங்கட்சி ஆன பின் அந்த குரலையே காணோம். யார் குரல்வளையை நெறிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தற்போது கஞ்சா புழக்கம் ஜாஸ்தி ஆகி விட்டது. நாளை கஞ்சா கடை வையுங்கள் நாடு நாசமாக போகும். இதற்கு பொறுப்பு அரசாங்கம். மக்களுக்காக ஆட்சி செய்கிறீர்கள் என்றால் மக்களை நல்வழிபடுத்துங்கள்.
’1000 ரூபாய் வேண்டாம்’
ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டிய விசயம். அதை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுக்கும் போது, சட்டசபையில் இதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை. சட்டசபையில் இதற்காக குரல் கொடுங்கள் சார், அப்போது தான் உண்மையான அரசியல்வாதி. சாராயத்தில் அரசாங்கத்தை நடத்தும் கேவலமான செயல் எதுவும் இல்லை
இலவசம் என்ற ஒன்று எங்களுக்கு தேவையில்லை. 1000 ரூபாய் பெண்களுக்கு வேண்டாம். பேருந்தில் ஓசி வேண்டாம். எங்களுக்கு தேவை மருத்துவம், கல்வி, நீட் ஒழிப்பது. அதற்கு முன் அவர்களுக்கு நீட் பயிற்சி கொடுங்கள்.
சாராயம் விற்ற காசில் எங்களுக்கு எதுவும் பண்ண வேண்டாம். ஏழைகளை போதைக்கு அடிமையாக்கி நாட்டை கூட்டிச்சுவராக்கிறீர்கள். யார் சாராயத்தை விற்கிறார்களோ அவன் மீது மலத்தை அள்ளி வீசுங்கள். பட்டியலினத்துக்காக குரல் கொடுப்போம் என கேட்கும் போதெல்லாம் நன்றாக இருந்தது. அரசியல்வாதிகளை திருத்த முடியாது சார். நாம் திருத்த வேண்டியது மக்களை.
வீரப்பன் மகள் நடிப்பு
இயக்குநர் ராஜா, பாடலாசிரியர் ஆலயமணியின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். கேளிக்கை வரி, கேளிக்கூத்து வரி ஆகிவிடக்கூடாது. பொறுப்புள்ள மனிதனாக இருந்தால் சமுதாயத்துக்கான படத்தை கொடுப்பார்கள். இந்தப் படம் சமுதாயத்துக்கான படம். இந்தப் படத்தின் பாடலை கேட்டதும் இந்த நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன்.
நாம்தான் இந்த மாதிரி படம் எடுக்கவில்லை. ஆனால் எடுப்பவர் உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இவருடன் இருக்கிறேன். வீரப்பன் மரண செய்தி கேட்டு பல லட்சம் பேர் வருத்தப்பட்டார்கள். அந்த குடும்பம் பட்ட கஷ்டத்தைத்தாண்டி தற்போது அவரது மகள் நடித்திருக்கிறார். கண்டிப்பாக எனது ஆதரவு இருக்கும். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்” எனப் பேசினார்.