திருச்சி மாநகராட்சி பகுதியில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், புகை வடிகால் சேவை கட்டணம், காலிமனை வரி மற்றும் தொழில் வரி போன்ற வரி இனங்கள், வரி இல்லா இனங்கள் மூலம் ரூ.357 கோடி வருவாய் வர வேண்டும். அனைத்து இனங்களிலும் முழுமையாக வரிவசூல் செய்யப்படுவதன் மூலம் தான் மாநகர மக்களுக்கு வளர்ச்சிப்பணிகளை நிறைவாக மேற்கொள்ள முடியும். இன்னும் 6 நாட்களில் நடப்பு நிதியாண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், மாநகராட்சியில் பல்வேறு வரியினங்கள் மூலம், ரூ.357 கோடிக்கு ரூ.190 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. ரூ.167 கோடி வசூல் ஆக வேண்டியுள்ளது. இதில் சொத்துவரி ரூ.163 கோடியில் ரூ.110 கோடி வசூல் ஆகி உள்ளது. இதனால் 100 சதவீதம் வரிவசூலில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பல ஆண்டுகள் வரி செலுத்தாமல் கோடிக்கணக்கில் பாக்கி வைத்து `டிமிக்கி' கொடுக்கும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுதலங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் தலையீடு இல்லாமல், `சீல்' வைக்கவும் முடிவு செய்து அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இதனால் பலர் தவணை தவணையாக கோடிக்கணக்கான பாக்கியை குறைத்து லட்சக்கணக்கில் கொண்டுவந்துள்ளனர். விரைவில் அவர்களிடமும் வரி பாக்கியை முழுமையாக வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.




மேலும் முக்கிய இடங்களில் மாநகராட்சி நிா்வாகத்துக்கு வாடகை செலுத்தாத மாநகராட்சி கடைகளும் பூட்டி `சீல்' வைக்கப்பட்டன. மேலும் வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் செலுத்த வேண்டிய வரிகளை மாநகராட்சி அலுவலகங்களுக்கு சென்று செலுத்திவருகிறார்கள். இன்னும் 6 நாட்களில் ரூ.167 கோடியை பாக்கி இன்றி வசூலிக்க லட்சக்கணக்கில் வரிபாக்கி வைத்துள்ளவர்களின் கட்டிட சுவரில் வரிபாக்கி குறித்த விவரங்களுடன் விளம்பர போஸ்டர் ஒட்டும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மாநகராட்சிக்கான வருவாயை பெருக்கிட, இதுவரை வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடங்களை கண்டறிந்து வரிவிதிக்கவும், வரி குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இனங்களையும் கண்டறிந்து, சரியான வரிவிதிப்பு செய்யவும் ஊழியர்களுக்கு மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அனைவரும் அரசின் விதியின்படி வரியை குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்த வேண்டும். அப்படி வரி செலுத்தாதவர்கள் மீதும், நிறுவனங்கள் மீதும் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண