சில அரசியல்வாதிகள் பேச்சில்  விஷம் இருக்கிறது என இயக்குநரும், பாஜக பிரமுகருமான பேரரசு தெரிவித்துள்ளார். 


சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ என்பவர் மாவட்ட செயலாலராக இருக்கும் வெங்கடாச்சலம் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தார். இதனால் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து ராஜூவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  நீக்கினார். இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஏ,வி.ராஜூ, 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பல பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். அப்போது நடிகை திரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். மேலும் திரையுலகைச் சேர்ந்த நடிகைகள், நடிகர் கருணாஸ் உள்ளிட்டவர்கள் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.


இதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சேரன், கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் மன்சூர் அலிகான்,  விஷால், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  நடிகை கஸ்தூரி உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஏ.வி.ராஜூ செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 


அவர் தனது அறிக்கையில், “அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்! அவர்களின் பேச்சில்  விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது! சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது, ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!


ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற  ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.இந்த மாதிரியான  அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்!” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: Vishal: த்ரிஷா பற்றி சர்ச்சை பேச்சு.. பணம் சம்பாதிக்கும் ட்ரெண்ட் என விஷால் கடும் கண்டனம்!