நடிகை த்ரிஷாவை பற்றி தரக்குறைவான கருத்துகளை பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகிக்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


சேலம் மாவட்ட அதிமுக ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ.வி. ராஜூ சமீபத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017 ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் பற்றி பேசினார். அப்போது நடிகை த்ரிஷா  பற்றி ஆதாரமற்ற தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். இதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம், இயக்குநர் சேரன் தொடங்கி தமிழ் சினிமா பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 


நடிகை த்ரிஷாவும் இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். ஆனால் ஏ.வி.ராஜூ வெளியிட்ட வீடியோவில் நான் திரிஷாவை பற்றி தவறாக பேசவில்லை. அவரை போன்றவர் என்றே குறிப்பிட்டேன். அது தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என சொல்லி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ஏ.வி.ராஜூவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 




 இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த  முட்டாள் ஒருவர் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். நான் சம்பந்தப்பட்ட உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் நிச்சயமாக பெயர்களைக் குறிப்பிட மாட்டேன்,

 

ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமல்ல, திரையுலகில் பரஸ்பர சக கலைஞர்களாகவும் இருக்கிறோம். உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

 பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் குறிப்பிடத் தகுதியற்றது. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன். 

 

மீண்டும் ஒருமுறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. ஒரு மனிதனாகவே இதை சொல்கிறேன். நிச்சயமாக, இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள்” என காட்டமாக விஷால் கூறியுள்ளார்.