இயக்குநர் ஏ.எல்.விஜய் மாதிரி ஒரு தன்மையான மனிதரை தான் பார்த்ததே இல்லை என்று புகழ்ந்துள்ளார் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன்.


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய். தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனான ஏ.எல்.விஜய் அஜித், த்ரிஷா நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 


தொடர்ந்து பொய் சொல்லப்போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, சைவம், வனமகன், இது என்ன மாயம்,தியா, தேவி, தேவி-2  உள்ளிட்ட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். 


இதற்கிடையில் 2014 ஆம் ஆண்டு நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்த ஏ.எல்.விஜய் அவரை 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின் 2 ஆண்டுகள் கழித்து டாக்டரான ஐஸ்வர்யா என்ற பெண்ணை அவர் 2வதாக திருமணம் செய்துக் கொண்டார். கடைசியாக நடிகை கங்கனா ரணாவத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடிக்க, அவரது வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.  இயக்குநர் ஏ.எல்.விஜய்யை நடிகர் பார்த்திபன் வெகுவாகப் பாராட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.


அதில் பார்த்திபன் பேசியிருப்பதாவது:


இயக்குநர் ஏ.எல்.விஜய் மாதிரி ஒரு தன்மையான மனிதரை நான் பார்த்ததே இல்லை. இயக்குநர்களில் விஜய்யைவிட சைவமான ஆளை நான் பார்த்ததே இல்லை. படத்தில் என்னைப் போன்ற இயக்குநர்கள் எல்லாம் நிறைய வன்முறை காண்பிப்போம். பின்னர் அதற்கு ஒரு விளக்கம் சொல்வோம். சமாளிப்போம். எல்லாம் செய்வோம். ஆனால் விஜய் அப்படியில்லை. அவர் உண்மையிலேயே மிகவும் தன்மையானவர். அவர் ரொம்ப நல்ல மனிதர். இதுவரை அவரிடம் நான் எந்த குறையையும் கண்டுபிடித்ததில்லை. எப்போதும் யாருக்காவது ஏதாவது உதவ முடியுமா என்று காத்துக் கொண்டிருப்பார்.




நான் வித்தகன் படத்தை ரிலீஸ் செய்யும் முன்னர் அதர்கு ப்ரோமோஷனுக்கு யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். உடனே அவர் எனக்காக லண்டனில் இருந்து ஏமி ஜாக்சனை வரவழைத்தார். அதற்காக அவரே டிக்கெட் போட்டு, ரூம் செலவுகளை ஏற்று செய்தார். அவர் செய்த செலவுகளுக்காக இதைச் சொல்லவில்லை. அவருடைய நல்ல மனதைப் பற்றிச் சொல்லவே இதைக் கூறுகிறேன். தேடிக் கண்டுபிடித்து யாருக்காவது உதவி செய்வார் விஜய். அவர் படங்களிலும் அது எதிரொலிக்கும். விஜய் மீது எனக்கொரு காதல் இருக்கிறது. ஏ.எல்.விஜய் மீதான காதலால் சொல்கிறேன் அவரது வாழ்க்கை அன்பானதாக அழகானது மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும்.


இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறியுள்ளார்.


இயக்குநர் பார்த்திபன் தனது முதல் படமான ‘புதிய பாதை’ தொடங்கி இறுதியாக திரைக்கு வந்த ’ஒத்த செருப்பு’ வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனிப்பாதையை உருவாக்கி வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் பயணித்து வருகிறார்.


உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழல் இவரது அடுத்த படைப்பு.  இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.