நம்ம வீட்டு பிள்ளை படத்தால் பாரதிராஜா தன்னிடம் 3 மாதங்களாக பேசவில்லை என நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் நம்ம வீட்டு பிள்ளை. பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், நடிகர்கள் சமுத்திரகனி,பாரதிராஜா, நட்டி, சூரி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குடும்ப உறவுகளை மையமாகவும், அண்ணன் தங்கச்சி பாசத்தை கொண்டும் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.
இப்படம் தொடர்பான நினைவுகளை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பாண்டிராஜ் பகிர்ந்துள்ளார். அதன்படி கடைக்குட்டி சிங்கம் படத்தைப் பார்த்து சிவகார்த்திகேயன் அதேமாதிரி படம் வேண்டும் என கேட்டார். அதனால் தான் நம்ம வீட்டு பிள்ளை படம் உருவானது. மேலும் பாரதிராஜா எனது அப்பா போன்றவர். அவரது படங்களை பார்த்து தான் நான் வளர்ந்தேன். நான் ஏவிஎம் ஸ்டூடியோவில் நான் காவலாளியாக வேலை பார்த்தேன். அப்போது ஒரு படத்தின் பூஜைக்காக பாரதிராஜா வந்தார்.
எப்படியாவது அவரை பார்க்க வேண்டும் என்ற முனைப்பில் குறுக்கே மறுக்கே போனேன். ஆனால் முடியவில்லை. மெரினா படம் பார்த்துவிட்டு என்னை அவ்வளவு பாராட்டினார். நம்ம வீட்டு பிள்ளை பண்ணும் போது அவருக்கான மாடுலேஷனில் நடிப்பார். ஆனால் நான் ஒன்று கேட்பேன். திருச்சிற்றம்பலம் பார்த்துவிட்டு அவருக்கு போன் செய்தேன். நான் நினைச்ச மாதிரி நடிக்காமல் என்னை சாவடிச்சிட்டிங்க.
இப்படி நடிக்கிறதுல எங்களுக்குள்ள அடிக்கடி மோதல் இருக்கும். என்னிடம் உன்னை மாதிரி ஒரு மோசமான டைரக்டர நான் பார்த்தே இல்ல. என்னை டார்ச்சர் பண்ற. நான் தூக்கிப்போட்டி போயிடுவேன் என மிரட்டுவார். இப்படி எங்கிட்ட ஏற்பட்ட குட்டி குட்டி மோதலால் பேசாமல் இருந்தோம். அந்த படத்தின் டப்பிங்கிற்கு நான் வரக்கூடாது என சொல்லிவிட்டார். அப்புறம் படம் ரிலீசானது. பாரதிராஜாவின் உதவியாளர் படம் பார்த்து அதனால் தன் குடும்பத்தில் அம்மா, மாமா ஒன்றிணைந்ததாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். எனக்கு போன் பண்ணினார். நானோ நம்ம வீட்டு பிள்ளை படம் ரிலீசாகி 3 நாட்கள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தேன். சிகிச்சை போய்க் கொண்டிருக்க ஒரு பக்கம் வாழ்த்து சொல்ல ஒரு கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. கிட்டதட்ட 3 மாதம் பேசாமல் இருந்த நிலையில் நான் நேரில் உன்னை பார்க்கணும் என சொன்னார். உடனே நான், சூரி உள்ளிட்டோர் மாலையுடன் அலுவலகத்தில் சென்று பார்த்தோம். சாரி கேட்டார். எங்க பார்த்தாலும் சாரி அன்னைக்கு அப்படி பேசியிருக்க கூடாது என பாரதிராஜா சொல்லுவார். இதன்பின்னர் நாங்கள் ரொம்ப நெருக்கமாகி விட்டோம் என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.