இயக்குநர் பாண்டிராஜ் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் நடித்தது பற்றியும், அதன் பின்னால் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பற்றியும் தெரிவித்துள்ளார். 


கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி சிவகார்த்திகேயன், ஓவியா, சதீஷ், பக்கோடா பாண்டி ஆகியோர்  நடிப்பில் வெளியான படம் ‘மெரினா’.  தேசிய விருது பெற்ற பசங்க படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பாண்டிராஜ் தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை இயக்கியிருந்தார். மெரினா எப்படி அனைவருக்குமான முகவரியாக இருக்கிறது என்பதை காமெடி கலந்து சொன்ன வகையில் இப்படம் அனைவரையும் கவர்ந்திருந்தது. 






நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குநர் பாண்டிராஜ் வம்சம் படத்திற்கு பிறகு அடுத்த படம் பண்ண எந்த கம்பெனியும் முன்வரவில்லை. ஒன்று ஊருக்கு போணும்.இல்ல ஏதாவது பண்ணனும் என்ற நிலைமை இருந்தது. அந்நேரம் ஸ்டில் கேமராவை வைத்து படம் இயக்கலாம் என்ற டிஜிட்டல் மயம் ஆரம்பமானது. அதுல முயற்சி பண்ணலாம்ன்னு தான் பீச் மக்களை அடிப்படையா கொண்டு படம் எடுக்கலாம் என நினைச்சி தான் “மெரினா” உருவானது.






அந்த படத்தின் கதையை கொஞ்சம் கொஞ்சமா தான் ரெடி பண்ணேன். அப்ப பீச் ஓரத்துல விலீங் பண்ற பையன் வேணும்ன்னு முடிவு பண்ணி புலமைப்பித்தனின் பேரன் உட்பட ஒரு 4 பேரை தேர்வு செய்தால் அவர்களிடம் நடிப்பு வரவில்லை. கதையும் மாறுகிறது. இன்னும் கொஞ்சம் ஜாலியா பண்ணலாம் அப்படி நினைச்சேன். அந்த நேரம் விமல் நடிச்ச வாகை சூடவா படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். 


அவரின் நகைச்சுவை தன்மை என்னை கவர்ந்தததால் வாய்ப்பு வழங்கினேன். அவர் ஆல்ரெடி பேமஸாக இருந்ததால் மெரினா பீச்சில் ஷூட்டிங் நடக்கும் போது இளைஞர்கள் கூட்டம் அவரை காண கூடும். இந்த படம் முடிஞ்சதும் 2,3 படங்களில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிட்டார். நான் கேடிபில்லா கில்லாடி ரங்கா படம் பண்ண அக்ரீமெண்ட் போட்டுருந்தேன். இதற்கிடையில் 3 படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க தனுஷ் கூப்பிட்டதாக சிவா சொல்ல, நான் நீ காமெடியனா? ஹீரோவா? முடிவு பண்ணிக்க என சொன்னேன். 


நானெல்லாம் ஹீரோவா ஆவேனா என சிவா கேட்டு விட்டு பின் 3 படத்தில் நடிக்கவில்லை என தனுஷிடம் சொல்ல, அவர் எனக்கு போன் அடித்து பேசினார். இந்த மாதிரி காமெடி வேடம் இல்லை. முக்கியமான ரோல் தான் என அவர் சொல்ல அதன்பிறகு நடித்தார். அதுதான் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என தனுஷ்- சிவகார்த்திகேயன் காம்போ உருவாக அடித்தளமாக அமைந்தது என பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.