இயக்குநர் பா.ரஞ்சித் மெட்ராஸ் படத்தில் நடிகர் கார்த்தி இணைந்த கதையை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 






2012 ஆம் ஆண்டு அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித் 2014 ஆம் ஆண்டு கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்த மெட்ராஸ் படத்தை இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் எப்படி அரசியல் கட்சிகளின் திரை மறைவு ஒப்பந்தங்களால் பலியாக்கப்படுகிறார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியது. 


இந்த படத்தின் சுவர் தான் கதையின் ஹீரோவாக இருக்கும். இதற்கு இரு அரசியல் கட்சிகள் போட்டி போடுவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும். இப்படியான கதையில் கார்த்தி எப்படி நடித்தார் என்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ரஞ்சித்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன மெட்ராஸ் படம் இன்றளவும் ரசிகர்களின் குட்புக்கில் இடம் பெற்ற படமாக அமைந்துள்ளது. 


இதனிடையே சில தினங்களுக்கு முன் பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்துக்கான நேர்காணல் ஒன்றில் பா.ரஞ்சித் மெட்ராஸ் படம் குறித்து பேசியுள்ளார். அதில் மெட்ராஸ் படத்தின் கதைக்காக வடசென்னை பகுதியில் அலைந்த போது தான் எனக்கு சார்பட்டா உலகம் பற்றி தெரிய வருகிறது. அதன்பின் நான் சார்பட்டா உலகம் பற்றி தேடிப் போனேன். எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நான் உடனே சார்பட்டா படத்தின் கதையை எழுதிவிட்டேன். 






இந்த படத்தின் கதையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடமும், கார்த்தியிடமும் சொல்லி ஓகே வாங்கி விட்டேன். ஆனால் கார்த்தி அப்போது 4 படங்களில் பிசியாக நடித்து வந்தார். நான் அவருக்காக ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதனால் அட்டக்கத்தி போல ஒரு ஜாலியான கதை எழுதலாம் என மஞ்சள் என டைட்டில் வைத்து கொஞ்சம் பரபரப்பான திரைக்கதை எழுதினேன். ஆனால் அதற்கு தயாரிப்பு நிறுவனம் ஏ சான்றிதழ் கிடைக்கும் என தயங்கியதால் நான் மெட்ராஸ் படம் இயக்க முடிவு செய்தேன். 


அதன் கதையை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்களுக்கு கதையின் கரு பிடித்திருந்தது. சில நடிகர்களை சந்தித்து கதை சொன்னோம். சிலர் வேண்டாம் என சொன்னார்கள்.சிலர் தயங்கினார்கள். அதன்பிறகு கார்த்தியிடம் கதையை படிக்க கொடுத்து என்னதான் இதில் பிரச்சனை இருக்கிறது. அவர் ஒரு கமர்ஷியல் நடிகர் என்பதால் ஏன் இந்த கதையை வேண்டாம் என சொல்கிறார்கள் என கேட்பதற்கு கொடுத்தோம். அவர் படித்து விட்டு ரொம்ப பிடிச்சதால நானே பண்றேன்னு சொன்னார். அவருக்காக சார்பட்டா பரம்பரை எடுக்க வெயிட் பண்ணோம். அவர் மெட்ராஸ் பண்றேன்னு சொன்னதால உடனே அப்படத்தை எடுத்தோம் என பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.