ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதில் தான் நியாயம் இருக்கிறது என இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். 


பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்  “வானம் கலைத்திருவிழா” என்ற நிகழ்ச்சியாக கொண்டாடி வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “நான் இலக்கியம் வாசிக்க தொடங்கியபோது முதன்முதலில் தோட்டியின் மகன் என்ற புத்தகத்தில் தலித் மக்களின் வாழ்க்கை வரலாறை படித்தேன். அதை படிக்கும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. சில எழுத்தாளர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை எழுதிய புத்தகங்களை படிக்கும்போது கோபமும் வந்தது. 






அம்பேத்கர் மாடர்ன் இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்தியா முழுமையும் சுதந்திரத்துக்காக பாடுபட்டு கொண்டிருந்தபோது ஒரு மனிதன் பொது சமூகம் காணாத தனித்த கனவு ஒன்றை கண்டுகொண்டிருந்தான். அன்றைக்கு அந்த கனவை நனவாக்க யாரும் அவருடன் கைகோர்க்கவில்லை. அம்பேத்கரின் குரல் அன்று தனித்து தான் ஒலித்தது. இங்கிருந்த ஒட்டுமொத்த அமைப்புகள், கட்சிகள் அவரை ஆங்கிலேயரின் கைக்கூலி என சொன்னார்கள். 


தனித்து செயல்படுவதே ஒரு சூழ்ச்சியா? தனித்த குரல் இருப்பது சூழ்ச்சியா? எனக்கு அம்பேத்கரை பிடிக்கும், நான் அதைப் பற்றி பேசுகிறேன். இது என்னோட மொழி. உனக்கு என்னோட உரையாட வேண்டுமென்றால் என்னை நீ சரியாக புரிந்துகொள் என்றுதான் சொல்கிறேன். அதில் சிக்கல் இருக்கிறது என்றால் யார் மீது பிரச்னை? நான் பேசுவது சரியல்ல. இவர்களுக்கு பின்னால் சூழ்ச்சி இருக்கிறது என குற்றங்களை சுமத்தி தப்பான ஆளாக மாற்றுகிறார்கள்.


அம்பேத்கர் இந்த கூப்பாடுகளை பற்றி எந்த கவலையும் படாதவர்.  நட்பு, பகை எது என்பது எங்களுக்கு தெரியும். விமர்சனம் என்பது இருக்கத்தான் செய்யும். அதை சரிசெய்வதற்காக தான் இருக்கிறோம். அம்பேத்கர், பெரியார், கம்யூனிஸ்டுகளின் தத்துவங்கள் என்பது வெவ்வேறானதுதான் என்றாலும் அதன் நோக்கம் ஒன்றுதான். நாங்கள் ஒன்றை விட ஒன்று மேலானது என சொல்லவில்லை. புரிந்து கொள்வதில்தான் நியாயம் இருக்கிறது” என்றார்