பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. 


எந்தவொரு பிரச்சினைக்கு தற்கொலை தீர்வல்ல என பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் தற்கொலை அல்லது அதற்கான முயற்சி செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான பிரபல போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


பீகார் மாநிலம் பகல்பூர் ஜோக்சர் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆதம்பூர் சிப்காட்டில் அமைந்துள்ள திவ்யதர்மா குடியிருப்பில் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  சென்று பார்த்தபோது படுக்கையறையில் அம்ரிதா உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 


முன்னதாக அவரது சகோதரி  அம்ரிதாவின் அறைக்கு மாலை 3.30 மணியளவில் சென்றபோது அங்கு தூக்கிட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அம்ரிதா சகோதரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அம்ரிதா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 


போஜ்புரி படங்களில் நடித்துள்ள அம்ரிதா பாண்டே, வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான பிரதிஷோத் வெப் சீரிஸிலும் அம்ரிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த சந்திரமணி என்பவரை திருமணம் செய்துக் கொண்ட அம்ரிதா பாண்டே தனது சினிமா வாழ்க்கை குறித்து மிகுந்த கவலையிலும், மன அழுத்தத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக அவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் தான் அம்ரிதா பாண்டே தற்கொலை முடிவை எடுத்துள்ளார். 


அவர் தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன்பு தனது வாட்ஸ்அப் செயலியில், “இரண்டு படகுகளில் வாழ்க்கை இருக்கிறது. அப்படி ஏன் சவாரி செய்ய வேண்டும். அதனால் படகை மூழ்கடித்து என்னுடைய பாதையை எளிதாக்கி கொண்டேன்’ என ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இப்படியான நிலையில் அம்ரிதா பாண்டே மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். 




வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)