பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திரமுகி 2 படத்தின் கதை என்ன என்பதை இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


சந்திரமுகி படம்


கடந்த 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சந்திரமுகி படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  பி.வாசு இயக்கிய இந்த படம் தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு இப்படத்தை தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது.


சந்திரமுகி 2 ரிலீஸ்


தற்போது சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகம் உருவாகியுள்ளது.  செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், ராதிகா,லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மரகதமணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. 


படத்தின் கதை இதுதான்?


சந்திரமுகி படம் என்றாலே பலரும் நியாபகம் வருவது வேட்டையாபுரம் அரண்மனை, நாட்டிய பெண்மணி சந்திரமுகி, வேட்டைய மன்னன் கேரக்டர்கள் தான். படத்தில் ஓவியமாக காட்சிப்படுத்தப்படும் சந்திரமுகி அழகில் ரசிகர்களே மயங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட கேரக்டர்களை 2ஆம் பாகத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இதனிடையே இயக்குநர் வாசு நேர்காணல் ஒன்றில் சந்திரமுகி 2  பாகம் குறித்து பேசியுள்ளார். 


அதில், ‘சந்திரமுகின்னா ஒரு வீடு, அதை பிரபு வாங்கிட்டு உள்ளே போவார். அதன் பின்னால் ஒரு குடும்பம் என்ன விஷயம் என்று தெரியாமல் உள்ளே போகும் . எல்லோரும் பயம் காட்டிட்டே இருப்பாங்க. அங்க பாம்பு இருக்கு, பயமுறுத்துற அறை இருக்குன்னு இப்படி எல்லாம் கதை போகும். 


இப்ப சந்திரமுகி 2 படத்தில் அதே அரண்மனை வீட்டுக்குள் புதுசா ஒரு குடும்பம் உள்ளே போகுது. சந்திரமுகி படத்தின் கதை எனக்கும் தெரியும், ரசிகர்களுக்கும் தெரியும். அந்த தொடர்பு தான் சந்திரமுகி 2 படம் என சொல்லாம். எடுத்துக்காட்டாக, அங்க இருக்கும் படிக்கட்டுகளை பார்த்தால் நம்மை அறியாமல் அங்கே போகாதன்னு ரசிகர் கத்துவாங்க. அந்த வீட்டுக்குள்ள இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொண்டு போலாம். 


லாரன்ஸ் இரண்டு குழந்தைகளை அந்த அறைக்கு கொண்டு செல்வார். அது ஏன்னு படம் பார்க்கும்போது புரியும். படத்தில் சந்திரமுகி ரூம், அந்த மாடிப்படிக்கட்டுகள் எல்லாம் வரும். சந்திரமுகி இதுல எப்படி வர்றாங்கன்னு தொடர்பு இருக்கும். மாமா வடிவேலுகிட்ட வீட்டை கொடுத்துவிட்டு போய்விட்ட நிலையில்  அதை அவர் வாடகைக்கு விட நினைக்கும்போது என்ன நடக்கும் என்பதும் சந்திரமுகி 2 படத்தில் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளது. அதாவது சிரிப்பு, பயம், திகில்,ரொமான்ஸ், இசைன்னு அப்படி ஒரு கலவை இருக்க முடியுமா படம் பார்க்கும் உங்களுக்கே நிச்சயம் ஆச்சரியம் தாங்க முடியாது" என்றார்.