பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, பிரியா ஆனந்த், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் விஜய் ரசிகர்கள் லியோ அப்டேட்டுக்காக காத்துள்ளனர். இந்த நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், லியோ இசை வெளியீட்டு விழா பற்றி கொடுத்த அப்டேட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், ”விஜய் அரசியலுக்கு வருவதால் உங்களுக்கு உறுத்தலாக உள்ளதா... விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடன் சேர்ந்து பயணிப்பேன்” என்றார். தொடர்ந்து,  “விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் பிறந்த நாட்களில் லியோ அப்டேட் வெளியானது. அதே போல் உங்களின் பிறந்த நாளை ஒட்டி லியோ அப்டேட் வெளியாகுமா?” என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த மன்சூர் அலிகான், “ நான் பிறந்த நாளே கொண்டாடுவதில்லை. சரக்கு படத்தின் ஆடியோ மட்டும் வரும். நிலாவின் ஆடியோ லான்ச் நிலாவில் நடக்கும்” என்றார். 


தொடர்ந்து நீட் தேர்வு பற்றி பேசிய மன்சூர் அலிகான், “கார்ப்பரேஷன் பள்ளியில் படித்த தமிழர்கள் தான் சாதித்துள்ளனர். நீட் போன்ற எந்த ஒரு நுழைவு தேர்வும் தேவையில்லை. நீட் தேர்வை தூக்கி போடுங்க. எந்த எண்ட்ரன்ஸ் எக்ஸாம் எதுவும் வைக்க கூடாது. தமிழ்நாட்டு பாடநூலை தான் இந்தியா முழுவதும் வைக்க வேண்டும். சில விஷயங்களை மாற்றிவிட்டு அவர்கள் சாதித்தது போல காட்டிக்கறாங்க. அது அவங்களுக்கே கேவலமாக இல்லையா...?” எனப் பேசியுள்ளார்.


90களில் மிரட்டல் வில்லனாக வந்து அதிரடி காண்பித்த மன்சூர் அலிகான் 2கே கிட்ஸ் மத்தியில் காமெடி வில்லனாக மாறியுள்ளார். குணச்சித்திர கேரக்டரில் நடித்து வரும் மன்சூர் அலிகான், லியோ படத்தைத் தொடர்ந்து சரக்கு என்ற படத்திலும் மெயின் ரோலில் நடித்துள்ளார்.


ஜெயக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி, தீனா, லொள்ளு சபா மனோகர், லியாகத் அலிகான், லயில்வான் ரங்கநாதன் என பலர் நடித்துள்ளனர். மது பழக்கத்தைப் பற்றிய கதையாக எடுக்கப்படும் சரக்கு திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மன்சூர் அலிகான் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.