இராமாயணத்தை தழுவி கடந்த வாரம் வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தை தொடர்ந்து, அதே பாணியில் மீண்டும் ஒரு கதை பாலிவுட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இது ராமாயணம் காலம்


வால்மீகி எழுதிய ராமாயணத்தை தழுவி  கடந்த ஜூன் 16 ஆம் தேதி ‘ஆதிபுருஷ்’ படம் வெளியானது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனாக சன்னி சிங் நடித்திருந்தனர். ஓம் ராவத் இயக்கிய ஆதிபுருஷ் படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகியிருந்தது. 


 படத்தின் டீசர், ட்ரெய்லரில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், ரூ.100 கோடி கூடுதலாக செலவு செய்யப்பட்டு இந்த படம் வெளியாகியிருந்தது. ஆனால் காட்சிக்கு காட்சி தியேட்டர்களில் மீண்டும் இப்படம் கேலிக்குள்ளானது. இதுஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் 4 நாட்களில் ஆதிபுருஷ் படம் ரூ.400 கோடியை கடந்ததாக தகவல் வெளியாகி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 


இயக்குநர் ஓம் ராவத் கேட்டுக் கொண்டதற்கிணங்க தியேட்டர்களில் ஹனுமனுக்கு தனியாக இருக்கை, தியேட்டருக்குள் குரங்கு வந்தது, படம் போட தாமதமானதால் தியேட்டர் தாக்கப்பட்டது என எங்கு பார்த்தாலும் ஆதிபுருஷ் பற்றிய பேச்சுக்கள் தான் இடம் பெற்றிருந்தது. இப்படியான நிலையில் மீண்டும் இராமாயணத்தை தழுவி பாலிவுட்டில் படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


தங்கல் படம் இயக்குநர் நிதேஷ் திவாரி


ஆமீர்கான் நடித்த ‘தங்கல்’ படத்தின் மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் நிதேஷ் திவாரி தான் இந்த புதிய இராமாயணம் படத்தை இயக்குகிறார். இதற்கான பணிகள் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், ஆலியா பட் சீதையாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது. 


இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ’நிதேஷ் ஒரு சிறந்த இயக்குநர் மற்றும் எனக்கு நல்ல நண்பர்.அவர் இயக்கிய தங்கல் படம் இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த படங்களில் ஒன்று. ஒவ்வொரு ராம பக்தரைப் போலவே நானும் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.ராமாயணம், ராமரைப் பற்றி நாம் எடுக்கும் பல படங்கள் நாம் ஒன்றிணைய உதவும் என நினைக்கிறேன். இத்தகைய படங்களை நம்மால் இயன்றவரை பிறருக்கு சொல்ல வேண்டும். முடிந்தவரை அனைவரும் பார்க்க வேண்டும்’ என கூறியுள்ளார்.