நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் பார்த்து விட்டு கருத்து தெரிவித்த இஸ்லாமிய பெண் ஒருவர், பின்னர் தான் படம் பார்த்தது தப்பு என மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் படத்திற்குப் பின், 2 ஆண்டுகள் கழித்து விஜய்க்கு பொங்கல் வெளியீடாக ‘வாரிசு’ படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
வசூல் நிலவரத்தை பொறுத்தவரை வாரிசை விட துணிவு அதிகமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்கள் வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும் தெரிவித்தனர். அந்த வகையில் இஸ்லாமிய பெண் ஒருவர், முதல் நாள் முதல் ஷோ படம் பார்த்து விட்டு வெளியே வந்து யூட்யூப் ஊடகம் ஒன்றிற்கு உற்சாகமாக பேட்டியளித்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் பேட்ஜ் அணிந்திருந்திருந்தார். அவர் தனது பேட்டியில், “தமிழ்நாட்டின் வாரிசே விஜய் தாங்க... வேற யாரும் இல்ல.. தளபதிக்கு எவ்வளவு, எந்த பிரச்சினை வந்தாலும் நாங்க இருக்கோம்” என தெரிவித்திருந்தார்.
பெண் ரசிகையின் இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் இதே பெண் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ”நான் பாவம் (படம் பார்த்தது) செய்துவிட்டேன். அதற்காக அல்லாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அவர் எனக்கு மன்னிப்பு வழங்குவார் என நம்புகிறேன். அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார். இதைப் பார்த்த பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்பெண் இப்படி மனம் மாறி பேச என்ன காரணம் என இணையவாசிகள் பலரும் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில் மூடர் கூடம் படத்தின் இயக்குநர் நவீன், அப்பெண் பேசிய வீடியோவை பதிவிட்டு இஸ்லாமிய சமூகத்தில் ஆணாதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது ட்வீட்டில், “இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.
இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும்” என கூறியுள்ளார்.