தாங்கள் தான் உண்மையான பொங்கல் வின்னர் என வாரிசு, துணிவு படக்குழுவினர் போஸ்டர் மூலம் மோதிக்கொண்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15) கொண்டாடப்படுகிறது. ஆனால் விஜய், அஜித் ரசிகர்களுக்கு ஜனவரி 11 ஆம் தேதியே பொங்கல் வந்துவிட்டது. காரணம் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய்க்கு பொங்கல் வெளியீடாக ‘வாரிசு’ படம் வெளியானது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதேபோல் மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படமும் 11 ஆம் தேதி தான் வெளியானது. இதனால் சம அளவில் காட்சிகளை ஒதுக்கும் வகையில், துணிவு படத்தின் முதல் காட்சி நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படம் 4 மணிக்கும் திரையிடப்பட்டது.
2 படங்களும் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், வசூல் நிலவரத்தை பொறுத்தவரை வாரிசை விட துணிவு அதிகமாக பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் பொங்கல் விடுமுறை தற்போது தான் தொடங்கியுள்ளதால் நிலைமை மாறலாம் எனவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே வாரிசு படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வாரிசு படம் “பொங்கல் வின்னர்” என போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.
இதற்கு போட்டியாக துணிவு படம் தான் “ரியல் பொங்கல் வின்னர்” என்ற கேப்ஷனுடன் போஸ்டர் ஒன்றை போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் உண்மையில் யார் தான் பொங்கல் வின்னர் என குழப்பமடைந்துள்ளனர்.