ஒடிசாவில் காணாமல் போன 22 வயதான கிரிக்கெட் வீராங்கனையின் உடல் அடர்ந்த வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனையாக இருந்து வந்தவர் ராஜஸ்ரீ ஸ்வைன் (வயது 22). இவர் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக 25 வீராங்கனைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். 


புதுச்சேரியில் செல்வதற்கான அணியின் இறுதிப்பட்டியலில் இவர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 11ம் தேதி டாங்கி என்ற பகுதியில் சக வீராங்கனைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். பயிற்சியில் இருந்தபோது, தனக்கு மனசு சரியில்லை என்றும், தான் வீட்டுக்கு சென்று சில மணிநேரம் இருந்துவிட்டு வருகிறேன் என்றும், ராஜஸ்ரீ தனது பயிற்சியாளரிடம் சொல்லிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, நீண்ட நேரமாகியும் ராஜஸ்ரீ வராததால் பயந்துபோன பயிற்சியாளர் 11ம் தேதி இரவு மங்களாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். 


தொடர்ந்து,  கட்டாக் மாவட்டத்தில் உள்ள அடகர் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ராஜஸ்ரீயின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, அந்த வனப்பகுதியில் தனிப்படை தேடுதல் வேட்டையை தொடங்கியது. அதன்படி முதலில் ராஜஸ்ரீக்கு சொந்தமான ஸ்கூட்டர் மற்றும் ஹெல்மெட்டை மீட்ட காவல்துறையினர், இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் அவரது உடலை மீட்டனர். 


இதுகுறித்து உயிரிழந்த ராஜஸ்ரீயின் தாய் தெரிவிக்கையில், “ஒரு தேர்வு முகாமுக்காக என் மகள் கட்டாக் சென்று, அங்கு உள்ள பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார். 10 நாள் தேர்வு முகாமுக்குப் பிறகு, என் மகள் சிறந்த வீராங்கனையாக இருந்தபோதிலும் இறுதி அணியில் இருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டார். இதனால், அவள் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். என் மகள் ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தபோதிலும், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.


தொடர்ந்து, ராஜஸ்ரீ சகோதரி பேசுகையில், “ காலை 9 மணியளவில் அவள் என்னை அழைத்தாள். அவள் ஒரு சிறந்த வீராங்கனையாக இருந்தாலும் அணியில் இருந்து விலக்கப்பட்டதாக என்னிடம் கூறி அழுதாள். நான் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அப்போது திடீரென என் போன் அழைப்பைத் துண்டித்தாள். அதனால், என் அம்மாவை அழைத்து ராஜஸ்ரீயிடம் பேசச் சொன்னேன். ஆனால், அன்றிலிருந்து அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது என்றே வந்தது. 


இதனால் பயந்துபோன நான், அவளது நண்பர்கள், அமைப்பாளர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் ஹோட்டலுக்குத் திரும்பவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்” என்று தெரிவித்தார். 


அப்போதிலிருந்து என் மகள் காணவில்லை. இதுகுறித்து, அவர்கள் (முகாம் ஏற்பாட்டாளர்கள்) எங்களுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் அவர்களைத் தொடர்பு கொண்டபோது, ​​ராஜஸ்ரீ காணாமல் போய்விட்டதாகக் கூறினர்” என்று தெரிவித்தார். 


தொடர்ந்து, உயிரிழந்த ராஜஸ்ரீயின் குடும்பத்தினர், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்றே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.